தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த அதிரடி உத்தரவு…!!

0
733 views

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந் நிலையில் திட்டமிட்டபடி, நல்லூரில் நாளை தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள், நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றுவதற்கு மற்றும் நினைவேந்தலை நிறுத்துவதற்கும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ்.பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விளக்கத்தினை முன்வைப்பதற்காக இன்று விசாரணைக்கு மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் மாநகரசபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுகாஸ், குருபரன் ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.

எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில்,

“அரசாங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக செய்யப்படும் இந் நினைவு தூபி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் கடந்த வருடம் 2 இலட்சம் ரூபாய் திலீபனின் நினைவுதூபி அமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதின் பிரகாரம் சுற்றுவேலி அமைக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, இவ் வருட நிதி ஒதுக்கீடாக 2 லட்சம் ரூபாவை நான் ஒதுக்கீடு செய்துள்ளேன். இதன் பிரகாரம் யாழ். மாநகர சபை தனது தீரமானங்களுக்கு ஏற்ப இதனை முன்னெடுக்கின்றது” என்பதை சட்டத்தரணி சுமந்திரன் மன்றுரைத்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாளைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள நினைவேந்தல் நிகழ்வு யாழ்.மாநகரசபையினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன் இதனை தடுப்பதற்கான முன்னகர்வுகள் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சுமந்திரன் உரிய ஆவணங்களை மன்றில் சமர்பித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸாரின் மனு மீதான கட்டளை மதியம் 2 மணிக்கு வழங்கப்படும் என தெரிவித்த நீதவான் சதீஸ்கரன் மேற்படி கோரிக்கை மற்றும் வாதங்களை பரீசீலனை செய்து சட்டத்தரணி சுமந்திரனின் முன்மொழிவுகளை ஏற்று பொலிஸாரின் கோரிக்கை மனுவினை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here