பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்ட வடமராட்சியில் தொற்று உறுதியான நபர் ஒருவர் சென்று வந்த காரணத்தினால் பருத்திதுறை நகரின் மத்தியில் அமைந்துள்ள தையலகம் ஒன்று முடக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய பலர் சுயதனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த கூலர் வாகன தரப்பினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நேற்றைய தினம் வடமராட்சி பகுதியில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரான பொலிகண்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர் சென்று வந்துள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்தே குறித்த தையலகம் முடக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரின் மத்தியில் தினமும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பருத்தித்துறை மத்திய பேருந்து நிலையத்துடன் இணைந்து காணப்படும் மத்திய சந்தை தொகுதியில் உள்ள ஜெயாஸ் தையல் கடைக்கே குறித்த தொற்றாளர் இரு தடவை சென்று திரும்பியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த தையல் கடையினை பருத்தித்துறை சுகாதார பிரிவினர் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதன் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் அவரவர் வீடுகளில் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து குறித்த தொற்றாளர் வந்து சென்றதன் பின்னர் கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களது விபரங்கள் சேகரிக்கும் நடவடிக்கையிலும் பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த தொற்றாளர் அந்தியேட்டி வீட்டிற்கு சென்று திரும்பியமை கண்டறியப்பட்டு பலாலி அன்ரனிபுரம் பகுதியில் 10 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








