உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில், கேப்டன்.டோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 44.2 ஓவரிலேயே 182 ரன்னில் சுருண்டது. இந்திய பந்து வீச்சாளர் சமி 3 விக்கெட்டும், யாதவ் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுக்கள்.வீழ்த்தினர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஆடுகளம் வேகம் மற்றும் பவுன்சிற்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் பந்தில் அனல் பறந்தது. இதனால் இந்தியாவின் தொடக்க வீரர்கள; தடுமாற்றம் அடைந்தனர். தவான் 14 பந்தில் 9 ரன்னிலும், சர்மா 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.
அதன்பின் வந்த வீராட் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 33 ரன்கள் எடுத்தார். இருந்தாலும் ரசல் வீசிய பந்தில் அவுட் ஆனார். அப்போது இந்தியா 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ரஹானே, ரெய்னா ஜோடி சேர்ந்தனர். ரஹானேவும் 10 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 78 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 5-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் தோனி களம் இறங்கினார்.
ரெய்னா 25 பந்தில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 22.5 ஓவரில் 107 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. இந்தியா வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தின் முழு பொறுப்பும் தோனியின் தோள் மீது விழுந்தது. அவரும் இந்த சுமையை சாதகமாக மாற்றும் முயற்சியில் பொறுமையாக விளையாடினார். மறுமுனையில் ஜடேஜா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து தோனியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரு ரன் இரண்டு ரன்னாக தட்டி தட்டி எடுத்தனர். இதனால் இந்தியா 150 ரன்னை கடந்தது. அதன்பின்பும் இந்த ஜோடி நங்கூரம் போல் நிலையாக நின்று இலக்கை எட்டியது. இந்தியா 39.1 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி 45 ரன்னுடனும் அஸ்வின் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியாவிற்கு, உதிரியாக 26 ரன்கள் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா தொடர்ச்சியாக 4 வெற்றிகளை ருசித்து உள்ளது. இன்னும்.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா எளிதில் வெற்றி பெற்று ‘பி’ பிரிவில் முதல் இடத்தில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.