உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல் வெற்றியை ருசித்தது. 11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடந்து வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, தனது 2 வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியின் மிரட்டல் பந்து வீச்சில் நசுங்கி போனது. 123 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. தொடக்க ஆட்டத்தில் 111 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இங்கிலாந்து மீண்டும் மண்ணை கவ்வியது.
இதனால் அணிக்கு பெரும் நெருக்கடியில் சிக்கியது..இனி எஞ்சிய 4 ஆட்டங்களில் 3–ல் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்று நிலைக்கு இங்கிலாந்து. தள்ளப்பட்டது. 14-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணியை எதிர்க்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. .இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து விளையாடியது. இங்கிலாந்து அணியின் வீரர் மொயின் அலி அதிரடி காட்டினார். மொயின் அலி 102 பந்துகளில் 12 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என மொத்தம் 128 ரன்கள் எடுத்தார். ஹக் பந்துவீச்சில் கோல்மானிடம் கேட்ச் கொடுத்து அவுட்.ஆனார். பெல்லும் 54 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 50ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 303 ரன்கள் எடுத்து ஸ்காட்லாந்து அணிக்கு 304 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இதனையடுத்து 304 ரன்கள் அடித்தால்.வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து பேட்டிங் செய்து விளையாடியது. ஸ்காட்லாந்து 10.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்களை இழந்து 47 ரன்கள் எடுத்திருந்தது. கோல்மான் 7 ரன்களிலும், மெக்லியோட் 4 ரன்களிலும் அவுட் ஆனார்கள். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொல்லும்படியாக ரன்எதுவும் எடுக்கவில்லை. இறுதியில் ஸ்காட்லாந்து அணி 42.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 184 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. ஸ்காட்லாந்து அணியில் அதிகப்பட்சமாக கோயட்செர் 71 ரன்கள் எடுத்தார்..