அடுத்து வரும் பருவ காலத்திற்கான தேசிய அணியில் வடக்கின் முத்துக்கள் மூன்று….!

0
613 views

தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான். ஆனாலும் தேசிய அணிக்கு விளையாட தகுதி இருந்தும் பல காரணங்களால் பலருக்கு அது நிறைவேறாத கனவாகவே முடிந்து விடுகின்றமை துரதிஸ்ரவசமானது. அவ்வாறு தேசிய அணிக்கனவோடு பயணித்த பல லட்சம் வீரர்களில் பல தடைகளுக்களுக்கு அப்பால் தமது திறமைகளால் தமது இலட்சியத்தை அடைந்து, தற்போது சர்வதேச மட்டத்தில் வெற்றிநடை போட தயாராகிறார்கள் நம் வடக்கின் மூன்று முத்துக்கள்.

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு வீரர்களை உள்வாங்குவதற்கான தேர்வுகள் அண்மையில் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனம் இம்முறை தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விபரங்களை நேற்று (09.04.2018) வெளியிட்டுள்ளது.

இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான நிசாம் பக்கீர் அலியின் கண்காணிப்பின் கீழ் நாடு முழுவதும் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில், இம்முறை தேர்வுகள் பல பாகங்களிலும் பல கட்டங்களாக இடம்பெற்றன.

அதன் நிறைவில் தற்பொழுது A மற்றும் B என இரண்டு குழாம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் A குழாமில் 30 வீரர்களும் B குழாமில் 18 வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

தற்பொழுது தெரிவாகியுள்ள வீரர்களில், ஏற்கனவே தேசிய அணியில் அங்கம் வகித்த வீரர்களுடன் இணைந்து மேலும் பல இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.

வட மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கழகங்களில் இருந்து ஒரே ஒரு வீரர் மாத்திரம் இந்த குழாமில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ரினௌன் மற்றும் நியு யங்ஸ் ஆகிய பிறிமியர் லீக்கில் பங்குபற்றும் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரண்டு வடக்கின் நாயகர்கள் இடம்பிடித்துள்ளதுடன், கிழக்கு மாகாண கழகங்களில் இருந்து இரண்டு வீரர்கள் தெரிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் வீரர்களான நிதர்சன் (சென்மேரிஸ் வி.க), யூட்சுபன் (யங்ஹென்றீசியன் வி.க, ரினௌன் வி.க) மற்றும் மன்னார் வீரரான பியூஸ்லஸ் (சென்ஜோசப் வி.க, நியு யங்ஸ் வி.க) ஆகியோரே தங்கள் சர்வதேச அறிமுகத்திற்காக காத்திருக்கிறார்கள்.

இதில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்பு நியூயங்ஸ் விளையாட்டுக் கழகத்திற்காக இலங்கைப் பிரிமியர் லீக் போட்டிகளில் ஆடிவரும் மன்னார் சென்ஜோசப் வீரரான பியூஸ்லஸ் அழைக்கப்பட்டுள்ளார். இவர் இவ்வருடம் டயலோக் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியதுடன் நியூயங்ஸ் அணி இத்தொடரில் மூன்றாமிடம் பெறவும் முக்கிய காரணியாக திகழ்ந்தார்.

கடந்த நான்கு வருடங்களாக அனுராதபுரம் சொலிட் அணிக்காக ஆடிவந்து அண்மையில் கொழும்பு ரினோன் கழகத்துடன் இணைந்த இளவாலை யங்ஹென்றீசியன் வீரரான யூட்சுபன் இலங்கை ஜூனியர் அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் ஆடியிருந்ததுடன் முதற்தடவையாக தேசிய சீனியர் குழாமில் இடம்பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவரின் சகோதரன் ஞானரூபனும் கடந்த தொடர்களில் தேசிய அணியினை பிரதிநிதிததுவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மற்றொரு வீரனான நாவாந்துறை சென் மெரிஸ் விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த நிதர்சன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த பலகாலமாக நாவாந்துறை சென்மேரிஸ் விளையாடுக் கழகம் தேசிய ரீதியில் பிரகாசிக்க அவ்வணியின் முக்கிய வீரராக செயற்பட்டதுடன் 23 வயதிற்குட்பட்ட தேசிய அணிக்காக “சாக்” சம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.

ஒரு வீரன் தனது நாட்டினை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு எவ்வாறான போராட்டங்கள், தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள், புறக்கணிப்புகளை கடந்து வந்திருக்க வேண்டும் என்பது இங்கு கூறி தான் புரிய வேண்டும் என்றல்ல.. அதுவும் நம் நாட்டில் அதுவும் வடக்கில் இருந்து என்றால் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.

இப்படியான பல போராட்டங்களை கடந்து இன்று, சர்வதேச மட்டத்திற்குள் நுழைந்திருக்கும் இவர்களின் புதிய பயனம் வெற்றிகரமானதாக அமையவும், சர்வதேச மட்டத்தில் மேலும் பல சாதனைகள் படைத்து எமது மண்ணுக்குபெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறோம்.

மேலும் இவர்களை போல் இன்னும் பல திறமையானவர்கள் நம் மண்ணில் கண்களில் சர்வதேசக் கனவுடன் தமது திறமைக்கான அங்கீகாரத்திற்காக ஏக்கத்துடன் காணப்படுகிறார்கள். நம்மவர்களின் சர்வதேச அறிமுகங்கள் ஒர் சாதனை தான் எனினும், சாதனை என்பதற்கு அப்பாற்பட்டு இவர்களை போல் இன்னும் சர்வதேச அறிமுகக் கனவுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் நம்மவர்களின் பார்வையில் விடிவெள்ளியாகவே காணப்படுகிறார்கள்.

எவ்வாறாயினும் வரும் காலத்தில் இன்னும் பல நம்மவர்களின் கனவுகள் நனவாகும் எனும் நம்பிக்கையோடு வடக்கை பிரதிநிதிதுவப்படுத்தும் நம்மவர்களை மேலும் பல சிகரங்களை தொட்டு எமது மண்ணுக்கு பெருமை சேர்க நாமும் வாழ்த்துவோமாக….!

 

தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள்;

A குழாம்

முன்கள வீரர்கள்;

D.T.S.அனுருத்த (நியு யங்ஸ் கா.க) , மொஹமட் ரஹுமான் (ரெட் ஸ்டார் கா.க) , அசேல மதுஷான் (புனித ஜோசப் கல்லூரி) , சபீர் ரசூனியா (ஜாவா லேன் வி.க) , மொஹமட் சிபான் (மாவனல்லை யுனைடட் வி.க) , சர்வான் ஜோஹர் (கொழும்பு கா.க)

மத்தியகள வீரர்கள்;

மொஹமட் அஸ்மீர் (கடற்படை வி.க) , தனுஷ்க மதுசங்க (கடற்படை வி.க) , கவிந்து இஷான் (விமானப்படை வி.க) , அபீல் மொஹமட் (கொழும்பு கா.க) , மொஹமட் ரிப்னாஸ் (கொழும்பு கா.க) , மரியதாஸ் நிதர்சன் (சென்.மேரிஸ் வி.க, யாழ்ப்பாணம்) , சுந்தராஜ் நிரேஷ் (சௌண்டர்ஸ் வி.க) , மொஹமட் முஸ்தாக் (யங் ஸ்டார் வி.க, மட்டக்களப்பு) , சதுர லக்ஷான் (க்ரீன் பீல்ட் வி.க, களுத்தறை) , சசன்க ஜயசேகர (ரட்னடம் வி.க)

பின்கள வீரர்கள்;

ஜூட் சுபன் (ரினௌன் வி.க) , டிக்சன் பியுஸ்லஸ் (நியு யங்ஸ் கா.க) , உதய கீர்த்தி (இராணுவப்படை வி.க) , அமித் குமார (பெலிகன்ஸ் வி.க) , சன்ஜுக பிரியதர்சன (சௌண்டர்ஸ் வி.க) , சமித் சுபாசன (டொன் பொஸ்கோ வி.க) , சுபாஷ் மதுசான் (கடற்படை வி.க) , லஹிரு தாரக (புளு ஸ்டார் வி.க)

கோல் காப்பாளர்கள்;

ராசிக் ரிஷாட் (ரினௌன் வி.க) , தனுஷ்க ராஜபக்ஷ (நியு யங்ஸ் வி.க) , ப்ரபாத் ருவன் அறுனசிறி (விமானப்படை வி.க), S.சுதேஷ் (SLTB வி.க) , கவீஷ் பெர்னாண்டோ (கொழும்பு கா.க)

Standby

ஹர்ஷ பெர்னாண்டோ (விமானப்படை வி.க) , D.K துமிந்த (விமானப்படை வி.க) , மொஹமட் பசால் (கொழும்பு கா.க) , டிலான் கெளசல்ய (கொழும்பு கா.க) , ஜீவன்த பெர்னாண்டோ (விமானப்படை வி.க)

B குழாம்

முன்கள வீரர்கள்;

சல்மான் அஹமட் (மாவனல்லை யுனைடட்) , மொஹமட் அர்சாட் (வெகனர்ஸ் வி.க) , ரியாஸ் அஹமட் (மாவனல்லை யூத் வி.க), சதுரங்க பெரேரா (இராணுவப்படை வி.க) , நெத்ம மல்ஷான் (சொலிட் வி.க)

மத்தியகள வீரர்கள்;

ஷெஹான் யஷ்மில (கிரீன் பீல்ட் வி.க, களுத்தறை) , அமான் பைசர் (ரட்னம் வி.க) , பரூட் பாயிஸ் (ஜாவா லேன் வி.க) , மொஹமட் முஜாஹித் (கெலி ஓய கா.க, கம்பளை) , பாசித் அஹமட் (கிறிஸ்டல் பெலஸ் கா.க) , தேஷான் பெரேரா (வெகனர்ஸ் வி.க), மொஹமட் சஹீல் (கடற்படை வி.க)

பின்கள வீரர்கள்;

தரிந்து மதுசங்க (நியு யங்ஸ் கா.க) , விகும் அவிஷ்க (ரெட் ஸ்டார் கா.க) , S.M.வசித் (கெடேரியன் வி.க, திருகோணமலை)

கோல் காப்பாளர்கள்;

மெஹமட் உஸ்மான் (ரினௌன் வி.க), மஹேந்திரன் தினேஷ் (பொலிஸ் வி.க)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here