இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு துறையின் அதிகாரிகளால் இந்தியப் பிரஜைகள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண்ணாவார்.
விசா நியமங்களை மீறியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் இலங்கை வந்த இவர்கள், வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குடிவரவு அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தமிழர்களின் கடைகள் அதிகமாக உள்ள செட்டித்தெருவில் இவர்களில் 9 பேர் துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் 9 பேர் ஜோதிடம் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறிய அதிகாரிகள் ஏனைய ஐவர் மரத்தொழிலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
தமது திணைக்களத்துக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
30 முதல் 36 வயதுக்கு உட்பட்ட இவர்கள் குறித்து விசாரணைகள் நடப்பதாகவும் அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த காலங்களின் பெரும்பாலும் நகைக்கடைகள் உள்ளடங்கலாக இந்தியாவில் இருந்து வந்த செட்டிமார்களின் கடைகள் நிறைந்த இடம் செட்டி வீதி. ஆனால் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அடுத்து பெருந்தொகையான செட்டி இனத்தை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட அங்கிருந்த ஏனைய இந்திய வம்சாவழியினரின் கைகளுக்கு அந்த கடைகள் கைமாறின.
ஆனால், இப்போதும் தலைநகர் கொழும்பில் நகைக்கடைகள் அதிகமாக காணப்படும் தெருவாக செட்டி வீதியே திகழ்கிறது. அங்கு கடைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவழியை சேர்ந்த இலங்கைத் தமிழர்களே.
இங்கெல்லாம் அவ்வப்போது உறவினர்களை பார்ப்பதற்காகவும் வணிகத்துக்காகவும் பலர் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து வந்து போவது வழக்கம்.
அதனை பயன்படுத்தி பலர் இவ்வாறு சுற்றுலா விசாவில் வந்து தொழில்கள் அல்லது சிறுவணிகங்களில் ஈடுபடுவது வழக்கம்.
இப்படியாக சுற்றுலா விசாவில் வந்த இந்தியர்கள் ஜோதிடம், குறி சொல்தல் மற்றும் துணி வியாபாரம் ஆகிய காரணங்களுக்காக இலங்கையின் வடக்கு கிழக்கிலும் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.