நெல்லியடியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பிறிதொரு பாடசாலையின் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கரவெட்டிக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி கரவெட்டி மத்திய கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. அங்கு பல பாடசாலைகளினது மாணவர்கள் நேற்றுச் சென்றிருந்தனர். சிவில் உடையில் முற்பகல் குறித்த பாடசாலைக்கு அருகில் சென்ற இரண்டு பேர் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்க முற்பட்டுள்ளனர்.
அதன் போது குறித்த இருவரயும் சிவில் உடையில் அங்கு நின்றிருந்த பொலிஸார் கைது செய்தனர். தவிர போதைப் பொருளை எந்த மாணவனிடம் விற்று விட்டு அல்லது திணித்து விட்டுச் செல்லவிருந்தனரோ அந்த மாணவன் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டான் என்று சம்பவத்தை நேரில் கண்டவர்களும் உறுதிப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்திய போதே அவர்களும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது.
அந்த 3 மாணவர்களும் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்காத ஆனால் கரவெட்டிக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.