அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை
வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகத் தெரிவித்து முல்லைத்தீவு பொலீஸாரால் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நாட்டில் இல்லாத காரணத்தால் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இருவர் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.
இதனடிப்படையில், சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.