”நாப்கினை மறைக்கத் தேவையில்லை!” – பாலிவுட்டில் பரபரக்கும் பேட்மேன் சேலஞ்ச் #PadManChallenge

0
602 views

பாலிவுட்டில் ’பத்மாவத்’ திரைப்படத்துக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்படும் திரைப்படம், ‘பேட்மேன்’. பாலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. பெண்களுக்குக் குறைந்த செலவில் நாப்கின்கள் தயாரித்த கோயம்பத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கைக் கதையைப் பேசுகிறது இந்தத் திரைப்படம்.

இந்தப் படம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் நிலவும் பல கற்பிதங்களை உடைக்கும் வகையில் இருக்கும்” என்று அக்‌ஷய் குமார் தெரிவித்திருக்கிறார். திரைப்படத்தைப் பல வகையில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அதில் ஒன்றாக #PadManChallenge அறிமுகப்படுத்தியிருக்கிறார் அக்‌ஷய். சமூக வலைதளங்களில் இது பிரபலமாகி வருகிறது. ஒரு நல்ல விஷயத்துக்கோ, பொழுதுபோக்குக்கோ ஒருவர், நண்பர்களுக்கு இதுபோன்ற சவால்களைக் கூறுவார்கள். இதற்குமுன், #IceBucketChallenge #100HappyDaysChallenge போன்ற சாவல்கள் வைரலாகின. அந்த வரிசையில், சானிட்டரி நாப்கினை கையில் வைத்தபடி பிரபலங்கள் போஸ் கொடுக்க வேண்டும் என்பதுதான் #PadManChallenge. இந்தச் சவாலை முதலில் தொடங்கிவைத்தவர், அருணாச்சலம் முருகானந்தம். அக்‌ஷய் குமார் மற்றும் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அக்‌ஷய் குமாரின் மனைவியுமான டிவிங்கிள் கண்ணாவுக்குச் சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு பதிவிட்டார்.

அந்தச் சவாலை ஏற்ற டிவிங்கிள் கண்ணா, நடிகர் அமீர் கான், நடிகை ஷாபனா ஆஸ்மி மற்றும் தொழிலதிபர் ஹார்ஷ் கோயிங்காவுக்கு இந்தச் சவாலை எடுத்துக்கொள்ளுமாறு செய்தார். நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை அலியா பட், தீபிகா படுகோன், விராட் கோலிக்கு சவால்விட்டார். ‘ஆம்! என் கையில் ’பேட்’ இருக்கிறது. இதற்காக நான் வெட்கப்படவில்லை. இது இயல்பான ஒன்று!’ என்ற உறுதிமொழியுடன் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை அலியா பட் இந்தச் சவாலை ஏற்று தன் ட்விட்டர் பக்கத்தில், ஜிம்மில் தலைகீழாகத் தொங்கியவாறு, சானிட்டரி நாப்கினை கையில் பிடித்து போஸ் கொடுத்துள்ளார். அமீர் கானும், சானிட்டரி நாப்கினை கையில் பிடித்தபடி புகைப்படத்தை வெளியிட்டு, ஷாரூ கான், அமிதாப் பச்சனுக்குச் சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு ட்விட்டியிருந்தார். இப்போது, சமூக வலைதளத்தில் இருக்கும் பலரும் இந்தச் சவாலை ஏற்று, சானிட்டரி நாப்கினுடன் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள்.

யூ-ட்யூப் பிரபலமான ஆரண்யா ஜோஹருடன் (Aranya Johar) இணைந்து ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் அக்‌ஷய் குமார். அது, #BleedingRani என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிடப்பட்டுள்ளது. ”மாதவிடாய் சமயத்திலும் எங்களால் திறமையாக வேலை செய்ய முடியும். ஃபேஸ்புக்கில் முற்போக்காக இருப்பதுபோல் இருக்கிறோம். ஆனால், உண்மையில் அப்படி இருப்பதில்லை’ என்பது போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் திரைப்படத்துக்கு இந்தியா முழுவதும் வரிவிலக்கு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவில் போதிய கழிப்பறைகள் இல்லாததால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அக்‌ஷய் குமார் நடித்து வெளியான ‘ஏக் டாய்லெட் கி பிரேம் காதா’ படத்துக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இதுபோன்ற சமூக அக்கறைகொண்ட திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் வரிவிலக்கு அளித்தால், மேலும் பல சமூக அக்கறையான திரைப்படங்கள் நிச்சயம் உருவாகும். ‘பேட்மேன்’ திரைப்படம் மூலம் மாதவிடாய் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here