உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்காக வடக்கின் 5 மாவட்டத்திலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நேற்றைய தினம் 11 லட்சத்து 82 ஆயிரம் ரூபாவினை கட்டுப் பணமாக செலுத்தினர்.
2018ம் ஆண்டு இடம்பெறவுள்ள உள்ளூர் அதிகார சபைக்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுகின்றது. இவ்வாறு போட்டியிடும் தேர்தலிற்காக வடக்கில் உள்ள 34 சபைகளில் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 33 சபைகளில் 32 சபைகளில் போட்டியிடும் வகையிலேயே நேற்றைய தினம் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 16 சபைகளிற்கான கட்டுப்பணமான 6 லட்சத்து 48 ஆயிரம் ரூபாவினை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராயா யாழ்ப்பாணம் தேர்தல்கள் செயலகத்தில் செலுத்தினார். இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 சபைகளிற்காக ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாவினை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திலும் , முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 4 சபைகளிற்கான கட்டுப்பணமாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாவினை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா செலுத்தியதோடு மன்னார் மாவட்டச் செயலக தேர்தல்கள் செயலகத்தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாவினை நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் செலுத்தினார்.
இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளில் 4 சபைகளில் போட்டியிடுவதற்காக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாவினை வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் செலுத்தினார்.
இந்த வகையில் நேற்று ஒரே நாளில் வடக்கில் போட்டியிடும் அத்தனை சபைகளிற்கான கட்டுப் பணத்தினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் 11 லட்சத்து 82 ஆயிரம் ரூபாவினை செலுத்தியுள்ளனர்.