மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களின் நிதி அன்பளிப்பில் உருவாகிய கிறிஸ்தவ மாணவர்களுக்கான பிரார்த்தனை மண்டபம் உடுப்பிட்டி மகளீர் கல்லூரியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வட மாகாணசபை உறுப்பினருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.சுகிர்தன், கே.தர்மலிங்கம், சிவன் அறக்கட்டளை நிதியத்தின் பணிப்பாளர் வி.கணேஸ்வரன் ஆகியோர் பாடசாலை சமூகம் அனைவரும் இதற்கான நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
பாடசாலை அதிபர் திருமதி ஜி.சேதுராஜா தலைமையில் முற்பகல் 8 மணியளவில் தேசிய கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது. தேசிய கொடியினை வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஏற்றி வைக்க மாகாணசபை கொடியினை உறுப்பினர் சுகிர்தன் ஏற்றிவைத்தார். இதன் பின்னராக பான்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்ட விருந்தினர்கள் அனைவரும் கூட்டாக புதிய கட்டடத்தினை திறந்து வைத்தனர்.
இங்கு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து நத்தார் பண்டிகை ஆரம்பமாகவுள்ள இந்த மார்கழி மாதத்தில் இந்த பிராத்தனை மண்டபம் திறந்து வைக்கப்படுவது விசேடமான அம்சம் எனத் தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில் இம்மண்டபத்தில் மாணவர்கள் யேசுபிரானை நினைத்து பிராத்தனையில் ஈடுபடவேண்டும். அதற்காக இக்கட்டிடத்தினை விரைவாக அமைக்க உதவிய அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற யேசு நாதரின் பொன்னான வாக்கியத்தினைப்போல் நீங்கள் கேட்டதற்கு அமைய இந்த நிதிப்பங்களிப்பினை வழங்கியுள்ளேன் எதிர்காலத்திலும் இதனையே செய்வேன் எனவே நீங்கள் கேளுங்கள் என்று தெரிவித்தார்.
கட்சி பேதங்களை மறந்து குறிப்பிட்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டாக இக்கட்டிடத்தினை அமைப்பதற்கு தமது நிதி ஒதுக்கீட்டினை மேன்கொண்டமையை முன் மாதிரியாக கொண்டு எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான பணிகளை இணைந்து செய்ய வேண்டும் என்பதை அங்கு கூடியிருந்த புத்திஜீவிகள் வலியுறுத்தினர். அதனால் பல பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதையும் குறிப்பிட்டனர்..