ஆஸி கிரிக்கெட் வீரர்களுக்கு யூசெய்ன் போல்ட் வேகப் பயிற்சி
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒலிம்பிக் மற்றும் உலக குறுந்தூர ஓட்டச் சம்பியன் யூசெய்ன் போல்ட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்களுக்கு இடையில் வேகமாக ஓடுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள யூசெய்ன் போல்ட் அதற்கான பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளார்.
ஓட்டப் போட்டியின்போது எவ்வாறு வீரர் ஒருவர் வேகமாக ஆரம்பிக்கின்றாரோ அதேபோன்று கிரிக்கெட் போட்டியில் முதலாவது ஒட்டத்தை துரிதமாக ஆரம்பிக்கவேண்டும் என போல்ட் கூறினார்.
இவ்விடயத்தில் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் போதிய வேகம் இருப்பதாகத் தெரியவில்லை என ஹேரல்ட் சன் ஊடகத்திற்கு போல்ட் தெரிவித்தார்.
‘‘அவர்கள் எப்போதும் மெதுவாகவே ஓட ஆரம்பிக்கின்றனர். சரியான வேகத்தைக் கொள்ளும்போது அது கிரிக்கெட் வீரர்களுக்கு வெகுவாக உதவும்’’ என்றார் போல்ட். இருபது–20 கிரிக்கெட் உட்பட கோடைக்காலத்தில் விளையாடப்படும் கிரிக்கெட் போட்டிகளின்போது விக்கெட்களிடையே அதி வேக ஓட்டத்தைப் பதிவு செய்யும் வீரருக்கு கெட்டோரேட் நிறுவனம், அதிவேக ஓட்ட விருது ஒன்றை வழங்க முன்வந்துள்ளது.