அற்புதமான ஒரு ஆய்வுகட்டுரை இலவசமாக இப்போது…. ச.முத்து

0
643 views

அற்புதமான ஒரு ஆய்வுகட்டுரை இலவசமாக இப்போது..
————————————————————————–
ஒருநாளில் ஒருமுறை தன்னும் நம் தலைகளை நிமிர்த்தி வானத்தை பார்க்க நேரமில்லாதவர்களாகவே நம் வாழ்வு அமைந்துவிட்டது. அத்தனை நேரமின்மை…

தொடுகை தொலைபேசி வந்தபின்னர் அதன் திரையை தொடுவதற்காக குனிந்த நம் தலைகள் இன்னும் நிமிரவே இல்லை..அவ்வளவு அவசர கதியில் நகர்கின்றோம்.
ஆனால் நாம் இன்று வசதிகள் என்று அனுபவிக்கும் அத்தனை பொருட்களுமே இப்படி வானத்தை நாட்கணக்கில் நோக்கியபடி இருந்தவர்களாலும், மரங்களின் கீழே இருந்து பழம் விழுவதை திரும்ப திரும்ப அவதானித்தவர்களாலும், நீரில் படுத்தபடி அதன் அடர்த்தியை அறிய முற்பட்டவர்களாலுமே உருவாக்கப்பட்டது…

அப்படியானவர்களின் இரவுபகல் பாராத நித்திரைவிழித்த முயற்சிகளின் பலன்தான் இன்று நாம் பார்க்கும் கேட்கும் உணரும் அத்தனை உபகரணங்களும்..சாதனங்களும்.
அப்படியானவர்களில் இன்று நம்மிடையே இருப்பவர் ஸ்டீபன் ஹாக்கிங்… இன்றைய உலகின் மிகச்சிறந்த அறிவியலாளரர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங் நமது தலைக்கு மேலாக விரிந்து கிடக்கும் பிரபஞ்சம் பற்றிய பல கோட்பாடுகளை உருவாக்கி இருக்கிறார்.
எம்முடைய வானத்தில் நீந்தும் சூரியன் தனித்து ஒன்று அல்ல. அதனை போல பலகோடி சூரியன்களும் அவற்றின் துணைக்கோள்களும் கொண்டதே கலாக்சி என்றும் பல லட்சம் கலாக்சிகள் சேர்ந்தே ஒரு அண்டம் என்றும் கருதுகோளை நிரூபிக்கும் கோட்பாடுகளை உருவாக்கியவர்களில் ஸ்டீபனும் ஒருவர்.
புவியீர்ப்பு அலை சம்பந்தமாக ஐன்ஸ்ரின் தொடக்கி வைத்த ஓட்டத்தை இன்றும் மெருகேற்றி மெருகேற்றி அதனில் இருந்து புதிது புதிதான விளக்கங்களை வரைபவர் ஸ்டீபன் ஹாக்கிங்.
ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய 21வது வயதில் உடல் இயக்கங்கள் அனைத்தையும் இழந்து பேச்சையும் இழக்கிறார்.இத்தனைக்கும் பின்னரும் இவர் அறிவுலகத்தில் ஏற்படுத்திய கோட்பாடுகள் சிந்தனைகள் நடப்பு உலகில் எவரும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று.
ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய “”காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) “” என்ற புத்தகம் உலக புத்தக விற்பனையில் சாதனை நிகழ்த்திய ஒன்று. ஏறத்தாள 10 மில்லியன் புத்தகங்கள் விற்பனையாகின. அதில் தமிழர்களாகிய நமக்கு பெருமை இருக்கிறது..! என்னவென்று விழிக்கிறீர்களா..இருக்கிறது உறவுகளே, அந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் தனக்கு முந்தைய விஞ்ஞானிகளில் தமக்கு ஆர்வம் ஊட்டியவராக சுப்ரமணியன் சந்திரசேகர் என்ற தமிழ்விஞ்ஞானியையும் குறிப்பிடுகிறார். ( இந்த சுப்ரமணியன் சந்திரசேகரன் பௌதிகத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.. 1983ல்)..


ஒரு கொஞ்ச காலம் முந்தி 2014ல் ஸ்டீபன் ஹாக்கிங் பிபிசி தொலைக்காட்சிக்கு செயற்கை நுண்ணறிவு ஒரு கட்டத்தில் மனித இனத்தை அழித்துவிடும் என்ற பொருளில் கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.( Stephen Hawking warns artificial intelligence could end mankind.- BBC /02 Dec 2014)
இன்றைய உலகின் மிகவும் பேசப்படும் அறிவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய 24வயதில் 1965ம்ஆண்டு எழுதிய 130 பக்கங்கள் கொண்ட விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்’ (Properties of expanding universes) என்ற ஆராய்ச்சி கட்டுரையை இந்த மாதம் 23ம்திகதி முதல் இலவசமாக எவரும் பார்க்கவும் தரவிறக்கவும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் திறந்துவிட்டுள்ளது. அதுநாள்வரை இந்த ஆய்வுகட்டுரையை படிக்கவும் பிரதி செய்யவும் ஒருவர் 65 பிரித்தானிய பவுண்ட் பணம் செலுத்தவேண்டி இருந்தது.
இப்போது இது எல்லோருக்கும் பொதுவான ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்களும் மாணவர்களும் அதனை பார்வையிடலாம்.
ஆங்கிலத்தின் விஞ்ஞான கலைச் சொற்களில் தேர்ச்சியும் தமிழில் எழுத்தாற்றலும் உள்ளவர்கள் இந்த ஆய்வுகட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தால் பாரதி ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”” என்று நூறு வருசம் முன்னம் கண்ட கனவை நிறைவேற்றிய புண்ணியம் உண்டாகும்.செய்வார்களா…?
– ச.ச.முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here