வடக்கையும் கிழக்கையும் இணைத்த நிர்வாக அலகு ஒன்றிற்காக குரல்கொடுப்பவர்களை முஸ்லீம்சகோதரர்களிற்கு விரோதமான போக்கானவர்கள் என்பது போல சில அரசியல்வாதிகள் கருத்துருவாக்குகின்றனர்.அவைகளை பரப்புகின்றனர். அவர்கள் அந்தக்கோரிக்கையின் நியாயத்தையும் பொருத்தப்பாட்டையும் மறைத்து வெறுமனே பயம் ஒன்றை உருவாக்கி தங்களுக்கான அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்.
1881 இல் 58%ஆக இருந்து பின்னர் கல்லோயா போன்ற பாரிய குடியேற்றத்திட்டங்கள், இடப்பெயர்வுகள் , யுத்த அழிவுகள் என பலவற்றைச்சந்தித்திருந்தாலும் இன்னும் தமிழர்கள் தான் கிழக்கில் பெரும்பான்மைச்சமூகமாக இருக்கிறார்கள். தொகுதிவாரியான எதிர்காலத்தேர்தல்களும் கிழக்கில் தமிழ் மக்களுக்கே வாய்ப்பாகவிருக்கப்போகின்றது. அந்த மக்களின் விருப்பப்படி இப்படி கிழக்கோடு வடக்கை இணைப்பது என்பது எந்த சமூகத்துக்கும் பாதிப்பைத்தரப்போவதில்லை.
மாகாண சபைகளை பொறுத்தவரையில் இன்றும் வடமாகாண சபையின் மேலதிக ஆசனங்களில் ஒன்று முஸ்லிம் ஒருவரிற்கு வழங்கப்பட்டிருப்பதாலும் கிழக்கில் தனியொரு கட்சியாக தமிழ் உறுப்பினர்கள் கொண்ட கட்சியே பெரும்பான்மையாக இருக்கிற போதும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக்கப்பட்டிருப்பதரு
இணைந்த வடக்கு கிழக்கின் சனத்தொகையில் 61%ஆக இருக்கின்ற பெரும்பான்மைத்தமிழ் மக்கள் மனதளவில் இணைந்தே இருக்கிறார்கள் . இது வரை காலமும் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் அவர்களின் எண்ணம் தேசியம் ஒன்றை பலப்படுத்துகின்ற ஒற்றை நோக்கத்திற்காகவே வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழிடங்களை ஒற்றை அலகாக நிர்வகிப்பதற்கு கோருகிற தமிழர்களின் கோரிக்கைகள் மிகநியாயமானவை. அதற்காக வேண்டி தமிழர்கள் செய்த தியாகங்கள் அளப்பரியவை.
ரிசாத் பதியுத்தீன் சொல்கின்ற இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்கள் 17% ஆகி சிறுபான்மை மக்களாகி விடுவார்கள் என்பது பொய். உண்மையில் 2210143 பேரை கொண்ட இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களின் மொத்தச் சனத்தொகை 6இலட்சத்து சில நூறுகள். இது மொத்த சனத்தொகையில் 23% ஆகும். புத்தளத்தில் இருந்து வடக்கிற்கு குடியேறவேண்டிய முஸ்லிம் மக்களைச்சேர்க்கும் போது இது இன்னும் 2-3%இனால் அதிகரிக்கலாம்.
வடக்கு கிழக்கு ஒரு அலகாக நிர்வகிக்கப்படும் என்று அறிவிக்கப்படுவதை அடிப்படையாகக்கொள்ளாத எந்த தீர்வும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படப்போவதில்லை . இதை இரண்டு மாகாணத்து தமிழ்மக்களும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தெளிவாக தெரிவித்து வந்திருக்கிறார்கள்.
ஒரு இனத்தின் மொத்த சனத்தொகையில் (எண்பது வீதமானவர்கள் ) குறித்த இடத்தில் மட்டும் செறிந்து வாழுகின்ற ஒரு சமூகத்தினை பொறுத்தவரை இவ்வாறான மாகாணம் போன்ற பெரிய நிர்வாக அலகு அவசியமானது. ஆனால் முஸ்லிம் சகோதரர்களில் அறுபத்தாறு வீதத்துக்கு மேற்பட்டவர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற படியால் அவர்களின் நன்மைகளை கருத்திற்கொள்கிற உள்ளூராட்சி மட்டத்திலான அரசியலே மிகப்பொருத்தமாக இருக்கும். இதை உணராமல் செய்கிற அரசியல் தூரநோக்கற்றது.
ஹிஸ்புல்லாவின் நாடாளுமன்றப்பேச்சை பார்த்தேன். வரலாற்றில் ஒரு போதும் வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த்தில்லை என்றும் தேவையானால் வட மாகாணத்தோடு வடமத்திய மாகாணத்தை இணையுங்கள் என்று கூறுகின்றார்.
வரலாற்றில் கோட்டேயும் றுகுண நாடும் யாழ்ப்பாண நாடும் கண்டி ராசதானியும் எப்போதாவது ஒன்றாக நிர்வகிக்கப்பட்டதா?
1815 இல் முழுத்தீவையும் கைப்பற்றிய பின் பிரித்தானியர்கள் கைச்சாத்திட்ட கண்டி மகுல்மடுவ ஒப்பந்தத்தின் படி கீழை நாட்டுடன் கண்டி இணைக்கப்படாமல் தனியாக நிர்வகிக்கப்படவேண்டும் என்று தான் சிங்கள பிரதானிகள் நிபந்தனை விதித்தார்கள்.
நிர்வாக இடையூறுகளை குறைப்பதற்காக அதுவரை தனித்தனியாக நிர்வகிக்கப்பட்ட தீவின் மூன்று நாடுகளையும் இணைப்பதாக ஆளுனர் பிரித்தானிய முடியாட்சிக்கு கடிதம் எழுதியதே வரலாறு. அதுவரையில் இந்தத்தீவு ஒருபோதும் ஒற்றையாட்சியின் கீழ் இருக்கவில்லைத்தானே. ஆகவே இலங்கை என்கிற நாட்டை ஹிஸ்புல்லா ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிடுவாரா?