உலக சைவ இளைஞர் மாநாடு எழுச்சிப் பேரணியுடன் ஆரம்பம்

0
293 views

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் உலக சைவ இளைஞர் மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆன்மீக எழுச்சிப் பேரணியுடன் ஆரம்பமானது.

தமிழ் எங்கள் மொழி, சைவம் எங்கள் வழி எனும் மகுட வாக்குடன், சைவத்தமிழ் மறுமலர்ச்சியில் இளைஞர்களின் பங்கும் பணியும் எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெற்று வருகின்றது.

மாநாட்டின் தொடக்க நாளான நேற்று, நல்லூரில் இருந்து மாநாடு நடைபெறும் இடமான யாழ்.இலங்கைவேந்தன் கலைக் கல்லூரி வரை ஆன்மீக எழுச்சிப் பேரணி இடம்பெற்றது.

நல்லை ஆதீனத்திற்கு முன்பாக, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் தென்கயிலை ஆதீன குருமகா சன்னிதானம் அகத்தியர் அடிகளார் ஆகியோரின் ஆசியுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பேரணியை ஆரம்பித்து வைத்தார்.

காரைநகர் சிவகாமி அம்மன் ஆலயக் கலைஞர்கள் பழந்தமிழர் வாத்தியமான பேரிகையை முன்னே முழங்கிச் செல்ல அதன் பின்னே சங்கொலியுடன் பறை, தப்பு, முழவு மற்றும் வாத்தியங்கள் இசைக்க பேரணி இடம்பெற்றது.

இதில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவர்களின் இனியம் இசைக்குழுவினர் கீழைத்தேய வாத்தியங்களை இசைத்துச் சென்றனர். பொன்னாலை வெண்கரம் படிப்பகம், சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக் கல்வி மாணவர்களின் சங்கொலி முழங்க யூனியன் கல்லூரி மாணவர்கள் தேவார பாராயணங்களுடன் சென்றனர்.

நல்லூரில் ஆரம்பித்த எழுச்சிப் பேரணி கோயில் வீதியூடாக சட்டநாதர் சிவன் கோயிலை அடைந்து அங்கிருந்து நாவலர் வீதியூடாகப் பயணித்து பலாலி வீதிக்குச் சென்று அந்த வீதியூடாக வேம்படிச் சந்தியை அடைந்து ஆஸ்பத்திரி வீதி, சத்திரத்துச் சந்தி ஊடாக கே.கே.எஸ் வீதியால் பயணித்து யாழ்.இந்துக் கல்லூரி வீதியால் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியைச் சென்றடைந்தது.

இந்தப் பேரணி மற்றும் மாநாட்டில் யாழ்ப்பாணம், மலையகம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மலையகம் போன்ற பல பிரதேசங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான சைவத்தமிழ் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டின் முதல் நாளான நேற்று நாயன்மார் அரங்கு, விபுலானந்தர் அரங்கு போன்ற ஆய்வரங்குகள் இடம்பெற்றன. இன்றும் நாளையும் இந்த மாநாடு இடம்பெறும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here