கொழும்புக்கும் மெல்போர்ணுக்குமிடையில் நேரடி விமான சேவைக்கு ஏர்பஸ் A330-200 விமானங்ககளைப் பயன்படுத்தப் போகிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர்பஸ் A330-200 களுடன் மெல்பேர்ண்-கொழும்பு விமான சேவையை அக்டோபர் மாதம் முதல் ஆரம்பித்த பின்னர், ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையில் பயணம் செய்பவர்கள் நேரடியாகப் பயணிக்க முடியும்.ஆஸ்திரேலியாவில் வாழும் அதிகப்படியான இலங்கையர்கள் விக்டோரிய மாநிலத்தில் வசிப்பதால், மெல்பேர்ணில் இருந்து இந்த சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும் இந்த ஆண்டு, அக்டோபர் 29ம் நாள் சேவை ஆரம்பமாகிறது என்றும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாகி கேப்டன் சுரேன் ரத்வாட்டே, நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“விக்டோரியா மற்றும் சுற்றியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு நேரடி சேவையின் நீண்ட நாள் தேவையை உணர்ந்து நாம் அதை பூர்த்தி செய்கிறோம்.”இலங்கைத் தலைநகரிலிருந்து இரவு நேர சேவையாகப் புறப்படும் விமானம், அடுத்த நாள் மதியம் மெல்பேர்ண் வந்து சேரும். அதே மெல்பேர்ண் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிற்பகல் புறப்படும் விமானம், அதே நாள் பின்னிரவு கொழும்பு சென்று சேரும்.இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்குமிடையில், தற்பொழுது நேரடி விமான சேவையை யாரும் வழங்குவதில்லை. கோலாலம்பூரில் அல்லது சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடொன்றில் கால் பதித்தே பயணிகள் தம் பயணத்தைத் தொடர வேண்டும்.
இப்படியான, ஒரு இடத்தில் இறங்கி ஏறும் “இலங்கை-ஆஸ்திரேலிய” பயணிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்ஸின் பிரதம வர்த்தக அதிகாரியான சிவா ராமச்சந்திரன் கூறினார்.
“இப்பொழுது ஆஸ்திரேலியாவிற்கும் இலங்கைத் தீவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒன்று தான் வழங்க இருக்கிறது. இது எமக்கு ஒப்பீட்டு அனுகூலத்தைத் தரும். கொழும்பிலிருந்து உடனடி இணைப்புகளை நாம் இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வழங்குகிறோம்.”இந்தப் புதிய பாதை ஆரம்பித்ததற்கு, ஸ்ரீலங்கன் ஏற்லைன்ஸ்ஸை, ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஆணையர், ப்ரைஸ் ஹட்ஷெசன் பாராட்டினார்.”நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான இணைப்பு, சுற்றுலா, வணிகம், வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது, அவை துடிப்பான இருதரப்பு உறவுகளுக்கான முக்கிய கூறுகளாக உள்ளன.”
விமான எண் நகரங்கள். நாட்கள்ப புறப்படும் நேரம் சென்றடையும் நேரம்
UL605 மெல்பேர்ண் – கொழும்புதினமும் 16:55 22:15
UL604 கொழும்பு-மெல்பேர்ண் தினமும் 23:50 15: 25 + 1