இலண்டனில் உதயசூரியன் கழக ஒன்றுகூடல் 2017 எப்படி நடந்தது?

0
1,463 views

இலண்டனில் உதயசூரியன் கழக ஒன்றுகூடல் 2017 எப்படி நடந்தது?

மற்றும் புகைப்படங்கள் பகுதி 2

காலை 10 மணிக்கே கழக அங்கத்தவர்கள் மாக்கி அடிக்கும் வேலையை தொடங்கிவிட்டார்கள். 12 மணிக்கு வெள்ளைக்குட்டி கூழ் சட்டி அடுப்பில் ஏற்றி காஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டார். பலாக்கொட்டை வெங்காயம் எல்லாம் முதல்நாளே உரித்து வைக்கப்பட்டதால் கூழ் வேலை வேகமாக ஆரம்பித்தது. நேரத்திற்கே வந்த கௌரி, நர்மதா மற்றும் பெண்கள் மேலும் தேவையான பூசணிக்காய் மற்றும் பொருட்களை வெட்டி கொடுத்தனர்.

குழந்தைகள் எல்லாம் வர ஆரம்பித்ததைப் பார்த்த தியாகராசா மாஸ்டர் மகன் கண்ணன் சிறிய காஸ் அடுப்பை பற்ற வைத்து சிக்கன் நக்கட்ஸ் மற்றும் பிரைஸ் பொரித்து குழந்தைகளுக்கு வழங்க ஆரம்பித்து  விட்டார் செல்வமதி அக்கா உதவிகள் புரிந்தார். நடணி அண்ணா மகன் கண்ணன் 3 பெட்டி நிறைய ஐஸ்பழங்கள் கொண்டு வந்து வைத்தார். குழந்தைகள் தமக்குப் பிடித்த ஐஸ்பழங்களை தேடித்தேடி எடுத்துச் சென்று சுவைத்தனர்.

விசியகுமார் அண்ணா வீட்டில் இருந்தே BBQ எல்லாம் பிரட்டி தயாராக கொண்டு வந்திருந்தார். 1.00 மணிக்கு பாலி மாமாவும், கண்ணனும் BBQ அடுப்பை பற்ற வைத்து கோழிக்கால்களை பரப்பி கிறில்லை ஆரம்பித்தனர். சரியாக 2 மணிக்கு வெள்ளைக்குட்டி கூழ் ரெடி என்று கூறவும் அனைவரும் மற்றைய வேலைகளை விட்டுவிட்டு கூழ் குடிப்பதற்கு வரிசை கட்டினர். கூழின் சுவை பற்றி எழுதுவதற்கு தனிப்பக்கம் தேவை. முக்கியமாகப் பெரியவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் விரும்பிக் குடிக்கக்கூடியவாறு இருந்தது மிகச்சிறப்பு. கூழுக்காக முசுட்டை முல்லை இலைகளை கணேஸ் ஊரிலிருந்து கொண்டு வந்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கறி சாப்பிடுவோருக்கு கட்டி கொண்டு வந்திருந்த இடியப்பமும் மரக்கறிகளும் கை கொடுத்தது. நடணி அண்ணா மகன் ஜீவன் ஜெலி, அன்னாசி, கசகசா, ஜஸ் எல்லாம் போட்டு கலந்த சர்பத்தை அனைவரும் விரும்பிக் குடித்தனர். சர்பத் முடிவடையும் வேளையில் மாறன் கொண்டு வந்திருந்த Fruit cocktail வித்தியாசமான சுவையில் அனைவராலும் விரும்பப்பட்டது. வெங்கடாசலம் மாஸ்டரின் மகன் கோபி பெரிய வாளியில் ஏதோ கொண்டுவந்தார் என்னப்பா இது என்றேன் Fruit salad அண்ணா என்றார். எனக்கு அன்று உள்ளே போகப் போகின்ற கலோரிக்கணக்கை நினைத்து அப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்து விட்டது.

3 மணியளவில் உதயசூரியன் கழகத்தின் 55 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு போட்டோ எடுக்கும் நிகழ்வு ஆரம்பமானது. சுமார் 70 அங்கத்தவர்களை வரிசைப்படுத்தி போட்டோ எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை புகைப்படங்கள் எடுத்த இராமகிருஷ்ணன் அண்ணாவும் டென்மார்க்கில் இருந்து வந்திருந்த சின்னக்கண்டு மேத்தியாரின் மகன் பவுண் அண்ணாவுமே அறிவார்கள் . ரொம்ப கஷ்டப்பட்டு முடிந்தவரை சிறப்பாக ஆண்கள் குழு போட்டோ எடுத்தார்கள். இங்கிலாந்து உதயசூரியன் கழகத்தலைவர் ஜீவன் ஓடர் செய்து வந்திருந்த கழக கலரில் கழக இலட்சினையுடனான 50 ரீசேட்டுக்களையும் கழக அங்கத்தவர்கள் அணிந்திருந்தது போட்டோவிற்கு மேலும் அழகு சேர்த்தது.

அடுத்ததாக புகைப்படம் எடுப்பதற்கு பெண்மணிகளை அழைத்த போது சுமார் 40 பேரும் அழகாகவும் அமைதியாகவும் வந்து நின்று புகைப்படக்காரர் வேலையை சுலபமாக்கினர்.

புகைப்படம் எடுத்து முடிந்து 3.30 மணியளவில் ஆண்கள் அனைவரும் உதயசூரியன் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் இருக்க பெண்கள் அனைத்து சிறுவர்களையும் மைதானத்தின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுவர்களுக்கான விளையாட்டுக்களை நடத்தினர். ஓட்டம் பந்தெறிதல் ஈட்டி எறிதல் தேசிக்காய் கரண்டி ஓட்டம்  என்று 5 வயது முதல் 13 வயது வரையான சிறுவர்களுக்கு  விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டு உடனடியாக பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஒரு பக்கம் தட்டு பத்தாது , கறுப்புப்பை வேண்டும் என்று சொல்லச் சொல்ல குயிலி கடைக்கும் மைதானத்திற்கும் ஓடிக் கொண்டிருந்தார். லவனும் செந்தூரனும் தண்ணீர் கான்களை நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அநபாயனும் நண்பர்களும் உடனுக்கு உடன் குப்பைகளை பொறுக்கி கட்டி வைத்தனர் பொதுவாகவே வந்திந்த அனைத்து அங்கத்தவர்களும் என்ன வேலை செய்ய வேண்டும் என தாமாகவே முன்வந்து அனைத்து  வேலைகளையும் அந்த அந்த நேரத்தில் செய்து முடித்தனர்.

பொதுக்கூட்டம் ஒருபக்கம் நடக்க  சிறுவர் விளையாட்டுக்கள் ஒருபக்கம் நடக்க எம் கடன் பணி செய்து கிடப்பதே என்று வெள்ளைக்குட்டி குழுவினர் கோழிப்புக்கை செய்து கொண்டிருந்தார்கள். கோழிப்புக்கை சட்டியைப் பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்தது. உடனேயே அங்கு கோழிப்புக்கை செய்து கொண்டிருந்த இங்கிலாந்து உதயசூரியன் கழகத்தலைவர் ஜீவன், சின்னவன்  மற்றும் வெள்ளைக்குட்டியிடம்  கேட்டேன் இங்கே சுமார் 200 பேர் தானே இருக்கிறோம் எதுக்கு 400-450 பேருக்கு கோழிப்புக்கை செய்கிறீர்கள் என்று. அதற்கு சொன்னார்கள் நாளைக்கு லண்டனில் லீவு ஒன்றுகூடல் முடிந்து லேட்டாக வீட்டிற்கு போவார்கள் லேட்டாக எழும்பி மத்தியானம் சமைப்பது கஷ்டம் அதனாலேயே தேவையானவர்களுக்கு Take away கொடுத்து விடப்போகின்றோம் என்று. வழக்கமாக ஒன்றுகூடலில் சாப்பாடு தான் தருவார்கள் உதயசூரியன் ஒன்றுகூடலில் விதம் விதமான குளிர்பானங்கள் தந்தார்கள் சாப்பாடு தந்தார்கள்  ரொம்ப வித்தியாசமாக Take away யும் தருகிறார்கள். அடுத்த வருடம் தூக்குச் சட்டியுடன் வருவதென்று முடிவு செய்துவிட்னே;

சில விழாக்கள் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் சில விழாக்கள் நாவிற்கு சுவையாக இருக்கும் லண்டனில் நடந்த உதயசூரியன் ஒன்றுகூடல் நாவிற்கு சுவையாகவும் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.

இதற்காக உழைத்த ஒவ்வொரு கழக அங்கத்தவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நன்றி

உதயசூரியன் கழக அங்கத்தவன்.

Photos- S.Ramakrishnan

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here