பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல் மக்களின் ஓட்டெடுப்பு முடிவு மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மட்டுமே கணக்கில் கொண்டு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக இருப்பதால் மற்ற உறுப்பு நாடுகளின் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இங்கிலாந்தை நோக்கி பல்வேறு காரணங்களுக்காக படையெடுத்ததால் அந்நாட்டு மக்களுக்கு வேலையிழப்பும் முன்னுரிமையும் குறைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்பது குறித்த ஓட்டெடுப்பை அந்நாட்டு அரசாங்கம் நடத்தியது. அதில் 51.9% மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பு முடிவின் காரணமாக அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். மேலும் பிரிட்டனின் கரன்சியான பவுண்டின் மதிப்பும் சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைய தொடங்கியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் மாற்றத்திற்கு பிறகு நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற தெரசா மே, 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி பிரிட்டன் அங்கமாக இருக்கும் சர்வதேச அமைப்புகளிருந்து அதன் அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேறலாம் என்ற விதியின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
உறுப்பு நாடொன்று அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான ஐரோப்பிய யூனியனின் விதியை மீறி செயல்படுவதற்கு பிரிட்டன் அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இறுதிக்கட்ட தீர்ப்புக்கு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் “அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற முடியாது என்றும் அதற்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டியது அவசியம் என்றும்” தீர்ப்பளித்தனர்.
பிரிட்டன் அரசாங்கத்துக்கு சாட்டை அடியாக கருதப்படும் இந்த தீர்ப்பு, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் “விரைவில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர்களின் சார்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்படும்” என்றார்.