வட்டுவாகல் கடற்படை முகாமில் நின்ற பொது மக்களிற்கு சொந்தமான கால் நடைகளில் இதுவரை 40 கால்நடைகளை வெளியில் விடுவித்துள்ளதாக கடற படையினர் தெரிவித்ததாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட்டுவாகல் கடற்படை முகாம் அளவீடு தொடர்பில் கடந்த செப்ரெம்பர் மாதம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முகாம் அமைந்துள்ள பிரதேச காணி உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளையும் படையினர் அபகரித்து வைத்திருப்பதனால் அதனையும் படையினர் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி குறித்த கால் நடையை ஒரு வாரத்தில் விடுவிப்பதாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர்.
இதன்பிரகாரம் வட்டுவாகல் கடற்படை முகாமில் நின்ற பொது மக்களிற்கு சொந்தமான கால் நடைகளில் 40 கால்நடைகளை கடந்த வாரம் முகாமிற்கு வெளியில் விடுவித்துள்ளதாக கடற படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை முகாம் பகுதியில் உள்ள சிறு காட்டுப்பிரதேசத்துற்குள் மேலும் சில கால் நடைகள் நிற்பதனால் அவற்றினையும் விரைவில் விடுவிப்பதாக தெரிவித்தனர். எனப் பதிலளித்தார்.
இவ்வாறு கடற்படையினரால் மாவட்ட அரச அதிபருக்கு தெரிவித்திருப்பது தொடர்பில் காணி உரிமையாளர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
கடற்படையினர் கூறியது போன்று இது வரைக்கும் எந்தவொரு கால் நடைகளும் எந்த உரிமைநாளர்களின் கரத்திற்கும் கிட்டவில்லை. அவ்வாறானால் குறித்த கால்நடைகள் எங்கு சென்றன. அது மட்டுமன்றி கால்நடைகளை விடுவிக்கும்போது உரிமையாளர்களாகிய எம்மை அழைத்து விடுவித்திருக்க வேண்டும். அல்லது அதனை மாவட்டச் செயலாளர் அல்லது பிரதேச செயலாளரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.
இவை எவையும் இன்றி விடுவித்ததாக படையினர் கூறுவதனை ஏற்க முடியவில்லை. அத்துடன் அது தொடர்பில் சந்தேகமும் எழுகின்றது என்கின்றனர்.