வல்வையின் முதலாவது தமிழ் பெண் விமானி அர்ச்சனா

0
49,727 views

டென்மார்க்கில் வாழ்ந்துவரும் வல்வைப் பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை அந்த நாட்டின் முதலாவது தமிழ் பெண் விமானியாகவும், வல்வையின் முதலாவது தமிழ் பெண் விமானியாகவும் கற்று முடித்திருக்கிறார்.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட 74 பேரை ஏற்றிச் செல்லும் ஏ.ரி.ஆர் 72 – 500 இலக்க முடைய விமானத்தை ஆறு தடவைகள் ஆகாயத்தில் ஏற்றி, அது போல கச்சிதமாக இறக்கி விமான ஓட்டிக்கான சிறப்பு பாPட்சையிலும் சித்தியடைந்திருக்கிறார்.

ஆஸ்திரியா சென்று இதற்கான விசேட கல்வியை பெற்று டென்மார்க் திரும்பியிருக்கிறார்.

வர்த்த விமான சேவையில் தமிழ் பெண்கள் பைலட்டுக்களாக வருவதற்கான வாய்ப்புக்களை நோக்கி நமது கனவுகள் விரிவடைய வேண்டும், அடுத்து போயிங், எயாபஸ் விமானங்களை நோக்கி நடந்து கொண்டிருக்கிறேன் என்றும் கூறினார்.

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்து டேனிஸ் மொழி ஆசிரியையாக இருந்த இவர் தமிழ் பெண்கள் புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்று கருதுகிறார்.

விமானியாக படிப்பதற்காக அமெரிக்கா சென்று மியாமியில் டீன் இன்ரநாஷனல் விமானிகள் கற்பித்தல் கல்லூரியில் படித்து, சித்தியடைந்தார்.

இறுதிப்பாPட்சையின் போது விமானத்தை அமெரிக்காவின் மியாமியில் இருந்து அத்திலாந்திக் சமுத்திர வழியாக தனி ஒருவராக ஆறு மணி நேரம் பறந்து சென்று மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கி ஏற்றி சிறப்பு சித்தி பெற்றிருந்தார்.

அமெரிக்காவில் பெற்ற ஏப்.ஏ.ஏ லைசென்சை ஐரோப்பாவில் பாவிக்க வேண்டுமானால் அதை ஐரோப்பாவிற்கான ஈ.ஏ.எஸ்.ஏ ஆக மாற்ற வேண்டும் இதற்காக டென்மார்க்கில் லேண் ரு பிளைட் என்ற விமானக் கல்லூரியில் படித்து 14 பரீட்சைகள் எடுத்து, பின்னர் சுவீடனில் உள்ள டைமன்ட் பிளைட் அக்கடமியில் தனியான பறப்புக்களை பறந்து ஐரோப்பிய சட்டங்களுக்கு அமைவாக தனது லைசென்சை மாற்றிக்கொண்டார்.

பின்னர் சன் எயார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, டென்மார்க் ஓகூஸ் நகரத்தில் உள்ள கிறைபேர்ட் விமான நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரியா சென்று விமானப்பறப்புக்கான ரைப்ரைட்டிங் எனப்படும் கற்கையை விசேடமாகக் கற்று சென்ற வாரம் அல்சி எக்ஸ்பிரஸ் விமானத்தை கச்சிதமாக ஓட்டி சித்தியடைந்தார்.

இந்த விமானத்திலேயே சமீபத்தில் பிரான்சில் நடந்த ஐரோப்பிய உதைபந்தாட்டத்திற்காக ஜேர்மன் நாட்டு அணி ஏற்றிச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பெண்கள் தமது சிந்தனைகளை புதிய இலக்குகளை நோக்கி குறிவைக்க வேண்டும் என்று கூறும் அர்ச்சனா சிறந்த திரைப்பட பின்னணி பாடகியாகவும் சென்ற வாரம் தேர்வாகியிருக்கிறார்.

சென்ற வாரம் சுவிற்சலாந்தில் இடம் பெற்ற சாதனைத்தமிழா 2016 நிகழ்வில் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தில் பாடியமைக்காக சிறந்த திரைப்பட பின்னணி பாடகியாகவும் தேர்வாகியிருக்கிறார்.

சங்கீதத்தையும், வயலின், புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களையும் முறைப்படி கற்ற அர்ச்சனா, பரத நாட்டியத்தையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்திருக்கிறார்.

விஜய் ரீவி லண்டன் அரேனாவில் நடத்திய மாபெரும் சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் டென்மார்க்கில் இருந்து முக்கிய பாடகியாக பாடியுள்ளார், இதுபோல மலேசியாவில் யுவன் ஷங்கர்ராஜா இசை நிகழ்விலும் பாடியுள்ளார், இவருடைய பாடல்கள் பல இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

துணைக்கு யாரும் இன்றி தனி யொரு பெண்ணாக உலகின் பல நாடுகளுக்கு சென்று கற்று வந்த அனுபவங்கள் மிகவும் புதுமையானவை, இவற்றுக்கெல்லாம் துணிச்சலே அடிப்படைத் தகுதியாகும் என்கிறார்.

வாய்ப்புக்கள் நம்மை தேடி வராது, நாமே அதை தேடிச் செல்ல வேண்டும்.. தமிழ் பெண்களின் கைகளிலும் வானம் வசப்படும் என்கிறார்.

வாழ்வை சரியாக திட்டமிட்டு முன் நகர்த்தினால் உலகில் எங்கு வாழ்ந்தாலும் சாதனை படைக்கலாம் என்பதற்கு இவருடைய முயற்சியும் ஓர் நல்ல உதாரணமாகும்.





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here