தொண்டைமானாறு செல்வச்சந்தி ஆலயத்துக்கு தெற்கு பக்கத்தில் 30 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தொண்டைமானாறு வெளிக்கள விஞ்ஞான ஆய்வு நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதென ஆய்வு நிலை பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. வடபகுதியிலுள்ள கல்விமான்களின் முயற்சியால் தொண்டைமானாறு அக்கரைப் பகுதியில், 1967ஆம் ஆண்டு தொண்டைமானாறு வெளிக்கள விஞ்ஞான ஆய்வு நிலையம் உருவாக்கப்பட்டு, இயங்கி வந்தது. 1987ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக ஆய்வு நிலையத்தின் கட்டடம் முழுமையாக சேதமடைந்தது. இதனையடுத்து, பணிப்பாளர் சபையினர் இந்த ஆய்வு நிலையத்தை, இருபாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடத்தினர். இந்நிலையில், தற்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமையால், தொண்டைமானாறு பகுதியிலேயே நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை பணிப்பாளர் சபை மேற்கொண்டது. இதற்காக 6 பரப்புக் காணி ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதனையடுத்து, முதற்கட்டமாக தனியார் நிறுவனம் ஒன்றின் நிதியுதவியில் கட்டடம் ஒன்று கடந்த 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, பணிப்பாளர் சபையினால் நிதி சேகரிக்கப்பட்டு, 30 மில்லியன் ரூபாய் செலவில் 3 மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டது. இதில் கருத்தரங்கு மண்டபம், பயிற்சிக்கு வருபவர்கள் தங்குவதற்கான வசதிகள், ஆய்வுகூட வசதிகள், கணிணி அறை என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. கட்டடப் பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளமையால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. –