ஆசிரியர்கள் சிலர் செய்கின்ற வேண்டத்தகாத செயற்பாடுகளே யாழ். குடாநாட்டின் அவலச் செயலுக்குக் காரணமாகும் : நீதிபதி மா.இளஞ்செழியன்….

0
595 views

இன்றைய காலத்தில் ஆசிரியர்கள் சிலர் செய்கின்ற வேண்டத்தகாத செயற்பாடுகளே யாழ். குடாநாட்டின் அவலச் செயலுக்குக் காரணமாகக் காணப்படுகின்றது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் மாணவர்கள் மீதான குற்றச்செயல்கள் சம்பந்தமான சட்ட ரீதியான நீதிக் கொள்கை விடயங்கள் தொடர்பில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் திங்கட்கிழமை(25) மாலை யாழ். மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் குறிப்பிட்ட விடயத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்படுவார். இதனைத் தொடர்ந்து விசாரணையின் போது மாணவன் கூறிய விடயம் பொய் என நீதிபதியினால் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக அம் மாணவன் கைது செய்யப்பட்டுப் பொய்யான குற்றச்சாட்டு, பொய்ச் சாட்சியும் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அம் மாணவனுக்கு ஏழு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்படும்.
பாடசாலைகளில் மாணவர்கள் அடிக்கப்பட்டார்கள் என்ற பிரச்சினை தொடர்பாக யாரும் நீதிமன்றம் வர வேண்டாம். இவ்வழக்கு மிகவும் கஸ்டமான வழக்கு. 16 வயதுடைய மாணவன், மாணவி ஆகியோர்களுக்கிடையில் புனையப்படுகின்ற விடயம். இது குற்றச் செயலாகக் காணப்படுகின்றது.
பாலியல் ரீதியான குற்றம், சித்திரவதைக்கான குற்றம் இரண்டுமே 07 மற்றும் 15 வருடங்களுக்கான குற்றமாகக் காணப்படுகின்றது. பாடசாலைகளில் அதிபரோ, ஆசிரியரோ யாராவது அசிங்கமான வார்த்தைப் பிரயோகத்தை மாணவர்கள் மீது பிரயோகிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் இரண்டு வருடச் சிறைத் தண்டனை, கன்னத்தினைக் கிள்ளினால் இரண்டு வருடம் சிறை, கழுத்தினைத் தொட்டால் நான்கு வருடம் சிறை. அதற்கு மேற்பட்ட விடயங்களுக்குப் பல வருடங்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படும்.
இன்றைய காலத்தில் ஆசிரியர் செய்கின்ற விடயங்கள் மட்டுமே யாழ். குடாநாட்டின் அவலச் செயலுக்குக் காரணமாகக் காணப்படுகின்றது. இவ் விடயத்தில் அனைத்து ஆசிரியர்களும், அனைத்து அதிபர்களும் குறித்த குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்திக்கொள்ளவேண்டாம். நீங்கள் இதற்கு விதிவிலக்கப்பட்டவர்கள். சம்பந்தப்படாதவர்கள். ஆனால், குற்றம் செய்கின்றவர்களைப் பாதுகாக்கவேண்டாம். இது எமது மாணவர்களின் கல்வியினைக் கேள்விக்குறியாக மாறிவிடும்.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் என். தெய்வேந்திர ராஜா, மற்றும் வலயக் கல்வி அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here