ஐ.பி.சி தமிழ் அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தனது தொலைக்காட்சி ஒளிபரப்பை சர்வதேசம் முழுவதும் கொண்டு செல்லும் சேவையை அறிமுகம் செய்யும் விழா கடந்த 27.02.2016 சனிக்கிழமையன்று சுவிற்சலாந்து நாட்டில் மிகவும் பிரமாண்டமான முறையிலே நடைபெற்றது.
உலகக் கலைஞர்கள் ஒன்று கூடிய மாபெரும் அரங்கில் 5000 ற்கும் மேற்பட்ட இருக்கைகள் நிறைந்து 7000 பேரை எட்டித்தொட்ட மக்கள் வெள்ளத்தில் ஆசிரியர் கி.செல்லத்துரை மற்றும் சனல் 4 சேவையின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே உட்பட ஐவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருதுகளை உலக ஊடகவியலாளர் வாழ் நாள் சாதனையாளர் பி.எச். அப்துல் ஹமீட்டும், ஐ.பி.சி நிர்வாகி நிராஜ்டேவிட்டும் வழங்கினார்கள்.
சிறீலங்கா கொலைக்களம் என்ற ஆவணப்படமெடுத்த கெலும் மக்ரேயுடன் இணைந்து, மற்றும் மூன்று புகழ் பெற்ற ஊடகவியலாளரை இணைத்து வாழ்நாள் சாதனையாளர் விருது தனக்கும் வழங்கப்படுவது பெருமைக்குரிய விடயம் என்று கி. செல்லத்துரை தெரிவித்தார்.
கடந்த 45 வருடங்களாக படைப்பிலக்கியத் துறையில் ஈடுபட்டு வல்வை அலைஒளியில் இருந்து இன்றைய அலைகள் வரை 45 வருடங்களாக தொடர்ந்து இடைவிடாது எழுதி வருவது..
மூன்று முழு நீள திரைப்படங்களை தயாரித்து, கதை வசனம் எழுதி இயக்கி நடித்தும் இருப்பது..
சுமார் 110 ற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றியது.. பல இசைத்தட்டுக்களை வெளியிட்டது..
உலகில் பல ஒலிபரப்பு நிலையங்களில் செய்தியாளராக செய்தி ஆய்வாளராக இருந்தமை..
1000 ற்கும் மேற்பட்ட செய்திக் காணொளிகளை யூ ரூப் இணையத்தில் தரவேற்றம் செய்தமை… அனைத்து செய்திகளையும் டேனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்ப்பு செய்தது, அவற்றை செய்திக்காணொளியாக தயாரித்தமை…
அத்தோடு நான்கு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, ஐந்து கட்டுரை நூல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு ஒலித்தட்டு..
10.000 மேற்பட்ட பக்கங்கள் டேனிஸ் மொழியில் இருந்து தமிழுக்கு செய்த மொழி பெயர்ப்புக்கள், எண்ணற்ற சிறுகதைகள்.. இணைய நூல்கள் இரண்டு, பல நூறு அரசியல் வரலாற்று கட்டுரைகள்..
வீரகேசரி வல்வை நிருபரில் இருந்து… ஐ.பி.சி டென்மார்க் செய்தியாளர்வரை பல்வேறு ஊடகங்களுக்கும் செய்தியாளராக பணியாற்றியது.. பல சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்தமை..
சிறந்த மேடைப்பேச்சாளராக கடந்த 30 வருடங்களாக வலம் வருவது..
சமுதாயப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவது, எண்ணற்ற மாணவர்களை, நடிகர்களை உருவாக்கியது..
தினசரி ஐந்து மணி முதல் ஆறு மணி நேரம் வரை சர்வதேச விவகார செய்திகளை எழுதுவது.. ஆகிய பணிகளை தொகுத்து இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது ஆசிரியர் கி.செல்லத்துரைக்கு வழங்கப்பட்டது.
அத்தருணம் தனது பாடசாலைக்கால வாழ்வை நினைவு கூர்ந்து தனது பாடசாலைத் தோழனாக இருந்த திரு. வே. பிரபாகரன் பாடசாலைக் காலத்தில் படைப்புலகில் தனக்கு வழங்கிய வழிகாட்டல் போன்ற விடயங்களையும் நினைவு கூர்ந்தார்.
கெலும் மக்ரே ஒரு மாபெரும் ஊடகவியலாளர் அவருக்கும் எனக்கும் ஒரே மேடையில் வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருப்பதை நம்ப முடியவில்லை.. ஆனால் அதுதான் உண்மை.. அதுவும் இத்தனையாயிரம் பேரின் முன்னால் வழங்கப்பட்டு, நேரடி ஒலிபரப்பும் செய்யப்படுவது வாழ்நாளில் மிகப்பெரிய பேறு ஐ.பி.சி நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்தார்.