வடமாகான சபை உறுப்பினர் கௌரவ ம.க.சிவாஜிலிங்கம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வல்வெட்டித்துறை தீருவிலில் சுமார் 25 கோடி செலவில் வல்வையின் சாதனையாளன் நீச்சல் வீரன் ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக அமைய பெற உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் தடாகம் அமைப்பது தொடர்பில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ.மங்கள சமரவீர , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ம.சுமந்திரன், வடமாகான சபை உறுப்பினர் கௌரவ ம.க.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த பேராசிரியர்.சபா.ராஜேந்திரன் முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளர் கே.சதீஸ் , உறுப்பினர் ம.மயூரன் மற்றும் அரச உத்தியோகதர்களுடனான இடம் பெற்ற கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
அதன் போது விரைவில் நீச்சல் தடாகம் அமைப்பது மற்றும் அதனோடு தொடர்பாக ஒரு உள்ளக விளையாட்டரங்கம் வல்வெட்டித்துறை ரேவடி சுங்க நிலப்பரப்பினை அண்டிய பகுதியில் அமைப்பது தொடர்பிலும் இறுதி முடிவு எட்டப்பட்டது. மேலும் நேரில் சென்று அந்த நீச்சல் தடாகம் அமைய உள்ள இடத்தினை பார்வை இட்ட அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சிவாஜிலிங்கம் அமைப்பது தொடர்பான ஏற்பாடுகளையும் பார்வை இட்டனர். இந்த நீச்சல் தடாகம் அமையுமானால் வல்வெட்டித்துறையில் புதியதொரு விளையாட்டு துறை உருவாக்கப்படும் என்பதுடன் வடமராட்சி மற்றும் யாழ் மாவட்ட நீச்சல் வீரர்களின் பல நாள் தேவை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை.