வல்வெட்டித்துறைப் பகுதியில் வீடொன்றில் இருந்த ஒரு தொகைப் பணம் மற்றும் 10 பவுண் நகை என்பவற்றை களவாடிய சந்தேக நபருக்கு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம் ஒரு வருட கடுழியச்சிறைத் தண்டனை விதித்ததோடு கைப்பற்றப்பட்ட பொருட்களை உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
வல்வெட்டி கொலனிப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா நகுலன் என்பவரின் வீட்டிலீருந்து கடந்த 2013 ஆண்டு ஒரு லட்சம் ரூபா பணத்தையும் 10 பவுண் தங்க நகைகளையும் திருடிய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த மகேந்திரராசா-அனுசன் என்பவரைக் கைது செய்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்திருந்தனர் . இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிவான் மா.கணேசராசா முன்னிலையில் இடம்பெற்றன. சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு ஒருவருட கடுழியச் சிறைத்தண்டனை வதித்த நீதிவான் சந்தேக நபரிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தையும் நகையையும் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.