தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டது. இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்குமுடிவடைந்தது.மாலை 6 மணியளவில் வாக்குகள் என்னும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. இதையடுத்து நேரடியான செலுத்திய வாக்குகளை எண்ணினர். பரபரப்பாக நடந்த இந்த வாக்கு எண்ணிக்கையில் தலைவர் பதவிக்கு நாசர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாசர் 1344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1231 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு பேசிய சரத்குமார் “ நாசர் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பிருந்த காழ்ப்புணர்ச்சியை மறந்துவிட்டு, நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்படவேண்டும். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ஏன் சிறந்தது என்பது பற்றி விளக்கி கூறுவேன். தேவைப்பட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையில் உதவி செய்வேன். இதை எனது தோல்வியாக கருதவில்லை, எதிர் அணியின் வெற்றியாக பார்க்கிறேன். நடிகர் சங்கம் சிறப்பாக செயல்பட என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்று தெரிவித்தார்.