வல்வையின் பிரதான அடையாளங்களில் ஒன்றாகவும் வல்வையின் கடலியலினை உலகிற்கு 76 வருடங்கள் முன்பு பறைசாற்றியிருந்த அன்னபூரணி எனப்படும் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டிருந்த பாய்மரக்கப்பலின் மாதிரி கப்பலின் காட்சிப்படுத்தும் வைபவம் நேற்று வல்வை சனசமூக சேவா நிலையத்தில் இடம்பெற்றது.
சனசமூக சேவா நிலையத் தலைவர் திரு.இந்திரகுமார் தலைமையில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் பிரதமகுரு ஸ்ரீ தண்டாயுதபாணிக தேசிகரின் சமய அனுஸ்டானங்களுடன் மாலை 05.00 மணியழவில் ஆரம்பமாகியது. கண்ணாடிப் பேழையில் வைக்டகப்பட்டிருந்த மாதிரி அன்னபூரணி கப்பலை சனசமூக சேவா நிலைய முன்னால் தலைவர் திரு வ.ஆ.அதிரூபசிங்கம் அவர்களால் நாடா வெட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தோடாந்து ஆசியுரையினை ஸ்ரீ தண்டாயுதபாணிக தேசிகர் அவர்களும், விளக்கவுரையினை கப்டன் ஆசுகனும், கருத்துரையினை வடமாகாண சபை உறுப்பினர் திரு எம்.கே.சிவாஜிலிங்கமும், சிறப்புரையை கப்டன் ஆதவனும் வழங்கியிருந்தார்கள். கப்டன் ஆசுகன் தனது விளக்கவுரையில் வைத்திலிங்கப்பிள்ளை புலவர் மற்றும் கின்னஸ் சாதனை வீரர் ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகியோரை நினைவுபடுத்தும் நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு வல்வை மக்கள் முன்வரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.