ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008–ம் ஆண்டில் இருந்து 2015–ம் ஆண்டு வரை நடந்த அனைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்களிலும் அரைஇறுதிக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். வெற்றிகரமான அணி என்ற பெருமைக்குரிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் மகுடத்தை ஏந்தியிருப்பதுடன், 4 தடவை இறுதிசுற்று வரை வந்துள்ளது.
ஐ.பி.எல். உருவானதில் இருந்து சென்னை அணியின் கேப்டனாக, என்றும் மாறாத கேப்டனாக திகழ்ந்தவர் 34 வயதான டோனி. சூதாட்ட விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்சுக்கு இரண்டு ஆண்டு காலம் தடை விதித்து நீதிபதி கமிட்டி அளித்த பரபரப்பான தீர்ப்பின் எதிரொலியாக, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
அதாவது டோனி முதல்முறையாக வேறு அணியில் விளையாட சம்மதிப்பாரா? அல்லது சச்சின் தெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்) பாணியில் என்றும் ஒரே அணியே என்று தனது ஐ.பி.எல். வாழ்க்கையை முடித்துக் கொள்வாரா? என்பது தெரியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 2 ஆண்டு தடை நடவடிக்கைக்குள்ளாகி இருப்பதால் 2016–ம் ஆண்டு ஐ.பி.எல். திட்டமிட்டபடி நடக்குமா? இவ்விரு அணி வீரர்களின் கதி என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள்எழுந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்து இது போன்று நடக்கவே சாத்தியமுள்ளதாக இந்திய அணியின் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் வழக்கமாக 8 அணிகள் பங்கேற்று வருகின்றன. தற்போது சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், அதை ஈடுகட்டும் வகையில் புதிதாக இரண்டு அணிகள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.
2016–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை, ராஜஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் மறுஏலம் விடப்பட வேண்டும் அல்லது, இவ்விரு அணி வீரர்களும் பரிமாற்றம் அடிப்படையில் வேறு அணிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் அல்லது, இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது 2016 மற்றும் 2017–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை இவ்விரு அணி வீரர்களும் மறந்து ஒதுங்கி இருக்க வேண்டும் அல்லது, சென்னை, ராஜஸ்தான் அணிகளை முழுமையாக வேறு நிறுவனங்களுக்கு விற்க வேண்டும். அவ்வாறு நடந்தால் அணி அதே பெயரிலோ அல்லது சிறிய பெயர் மாற்றத்துடனோ நீடிக்கும். அவ்வாறு நடந்தால் வீரர்களும் தங்களது அணிகளில் தொடர முடியும்.
ஐ.பி.எல். விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வருகிற 19–ந்தேதி மும்பையில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் அவசரமாக கூடி ஆலோசிக்க இருக்கிறார்கள்.
உரிமையாளர்: முதலில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் பிரைவேட் லிமிடெட் பெயரில் மாற்றம் வாங்கப்பட்ட விலை: ரூ. 577 கோடி
கேப்டன்: டோனி
பயிற்சியாளர்: ஸ்டீபன் பிளமிங்
தற்போதைய வீரர்கள்: 25
நட்சத்திர வீரர்கள்: ரெய்னா, பிரன்டன் மெக்கல்லம், அஸ்வின், வெய்ன் சுமித், பிராவோ
சிறந்த செயல்பாடு:– 2010, 2011 சாம்பியன் வெற்றி–79, தோல்வி–51, டை–1, முடிவில்லை–1
ராஜஸ்தான் ராயல்ஸ் :
உரிமையாளர்: மனோஜ் பாதாலே, ராஜ்குந்த்ரா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோர்
வாங்கப்பட்ட விலை: ரூ.425 கோடி
கேப்டன்: ஷேன் வாட்சன்
தலைமை ஆலோசகர்: ராகுல் டிராவிட்
தற்போதைய வீரர்கள்: 25
நட்சத்திர வீரர்கள்: ஸ்டீவன் சுமித், ரஹானே, பவுல்க்னெர், ஸ்டூவர்ட் பின்னி.
சிறந்த செயல்பாடு: 2008 சாம்பியன் வெற்றி–61, தோல்வி–53, டை–3, முடிவில்லை–1