இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கார்டிப் நகரில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்திருந்தது. அலி (26), பிராட் (0) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு பிராட் (18) ஏமாற்றினார். ஸ்டார்க் வீசிய 96வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த அலி, டெஸ்ட் அரங்கில் 3வது அரைசதம் அடித்தார். பொறுப்பாக ஆடிய இவர், 88 பந்தில் 77 ரன்கள் (ஒரு சிக்சர், 11 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ ஆண்டர்சன் (1) போல்டானார். முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 430 ரன்கள் எடுத்தது. மார்க் வுட் (7) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 5, ஹேசல்வுட் 3, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (17) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் ரோஜர்ஸ், டெஸ்ட் அரங்கில் 12வது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஸ்டீவ் ஸ்மித் ஒத்துழைப்பு தந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சேர்த்த போது அலி ‘சுழலில்’ ஸ்மித் (33) சிக்கினார். அபாரமாக ஆடிய ரோஜர்ஸ் (95) சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (38), வோக்ஸ் (31) பெரிய அளவில் சோபிக்கவில்லை. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்து, 166 ரன்கள் பின்தங்கி இருந்தது. வாட்சன் (29), லியான் (6) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அலி 2, ஆண்டர்சன், மார்க் வுட், ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.