ஆஷஸ் கிரிக்கெட் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு, 343 ரன்கள் குவிப்பு: ஜோ ரூட் அபார சதம்

0
325 views

இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் யுத்தம் என்று கருதப்படும் ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியது. இங்கிலாந்தின் கார்டிப் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் குக்கும், லைத்தும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். ஆனால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்கள். இயன் பெல் 1 ரன் எடுத்து மிட்செல் ஸ்டார்க்கின் ஃபுல் லெந்த் ஸ்விங் பந்துக்கு பிளம்ப் எல்.பி.ஆனார். அவரது மோசமான பார்ம் தொடர்கிறது.

ரூட் களமிறங்கி ஸ்டார்க் பந்தில் கால்காப்பில் வாங்க, பலத்த முறையீடு அவரது மட்டையின் உள்விளிம்பில் பட்ட பந்தினால் அவுட் ஆக மாறவில்லை. 2-வது பந்தில் எட்ஜ் செய்ய கேட்சை பிராட் ஹேடின் கோட்டைவிட்டார். குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் வாய்ப்பிலிருந்து இங்கிலாந்தை மீட்ட பெருமை பிராட் ஹேடினையே சாரும். ஆனால் அதன் பிறகு ரூட் ஆடிய ஷாட்கள் அபாரமானது. ஆக்ரோஷமான கட் ஷாட்களும் அருமையான டிரைவ்களும் ரூட்டின் பவுண்டரிகளில் அடங்கும். உணவு இடைவேளைக்குப் பிறகு தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியாவினால் ரூட்,  பேலன்ஸ் ஆகியோரை வீழ்த்த முடியவில்லை.

 

 

88/3-லிருந்து 190/3 என்று இங்கிலாந்து உயர்ந்தது. அரைசதத்தை 56 பந்துகளில் எடுத்த ரூட், தேநீர் இடைவேளையின் போது 93 ரன்கள் எடுத்திருந்தார்.  பேலன்ஸ் திருப்திகரமாக ஆடவில்லை என்றாலும் அவர் அவுட் ஆகாமல் ஆடியதால் இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 39 ஓவர்களில் 153 முக்கிய ரன்களைச் சேர்த்தனர். ஜான்சனின் ரவுண்ட் த விக்கெட் பவுன்சரில் இருமுறை பந்து மட்டையில் பட்டு எங்கு சென்றது என்பது பேலன்ஸுக்கே தெரியவில்லை. ‘பேலன்ஸ்’ தவறிவிட்டார்.

கேரி பேலன்ஸ் 61 ரன்கள் எடுத்த நிலையில்  ஹேசில்வுட் ஒரு பந்தை ஆங்கிளாக உள்ளே கொண்டு வந்தார். பிளிக் ஆட முயன்று தோல்வியடைய பந்து கால்காப்பைத் தாக்க தர்மசேனா அவுட் கொடுத்தார். அதன் பிறகு 56-வது ஓவரை  ஹேசில்வுட் வீச ஓவர் பிட்ச் பந்தை ஸ்கொயர் டிரைவ் செய்து பவுண்டரி மூலம் தனது 7-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார் ரூட். 118 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் அவர் சதம் எடுத்தார். சதம் எடுத்ததை கொண்டாடும் விதமாக அற்புதமான ஒரு நேர் டிரைவை அதே ஓவரில் அடித்தார்.

 

பேலன்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து பென் ஸ்டார்க் களமிறங்கினார், ஜான்சன் வீசிய ஆஃப் திசை பவுன்சரை ஹூக் செய்ய டாப் எட்ஜ் நேராக பந்தை சிக்சருக்கு கொண்டு சென்றது. 86 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் 166 பந்துகளில் 134 ஓட்டங்களை பெற்றிருந்த ரூட் ஸ்டார்க் பந்தில் வட்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஸ்டார்க் வேகத்தில் பென் ஸ்டார்க்கும் 52 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது. அலி 26 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here