லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றின்போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் இளைஞன் பாவலன் பத்மநாதன் வேகமாக வீசிய பந்து நெஞ்சுப்பகுதியில் பட்டதால் மூர்ச்சையுற்று விழுந்து அந்த இடத்திலேயே அகால மரணமானார். ஞாயிறன்று இடம்பெற்ற பிரிட்டிஷ் தமிழ் கிரிக்கெட் லீக்கில் மானிப்பாய் பரீஷ் (Manipay Parish Sports Club)அணியின் ஆட்டத்தின்போதே இந்த சம்பவம் நடைபெற்றது.
சிறப்பான சகலதுறை ஆட்டக்காரரான 24 வயதுடைய பாவலன் பத்மநாதன் பருத்தித்துறையை சொந்த இடமாகவும் தற்போது இங்கிலாந்தில் வசித்துவந்த யாழ் ஹாட்லி கல்லூரி பழைய மாணவனாவார். பந்தினால் தாக்கப்பட்டதும் நிலைகுலைந்துபோன பாவலனைக் காப்பாற்ற விசேட அம்புலன்ஸ் வண்டிகளிலும், உலங்குவானூர்தியிலும் மைதானத்துக்கு விரைந்த வைத்தியர்கள் கடுமையாகப் போராடியபோதும், முயற்சிகள் பயனளிக்கவில்லை.
களத்தில் பாவலுடன் பேட்டிங் செய்த மற்றொரு வீரர் கூறுகையில்,‘‘ பந்து தாக்கியதும் எப்படி உள்ளீர்கள் என கேட்டதற்கு, மார்பை அழுத்தியபடியே பெருவிரலை காட்டி ஒன்றுமில்லை என்றார். பின் இரண்டு அடி எடுத்து வைத்ததும் அப்படியே கீழே சரிந்தார். கடைசியில் சிறந்த நண்பனை இழந்து விட்டேன்’’ என்றார்.
இது தொடர்பாக வல்வை புளூஸ் இங்கிலாந்து அணிப் பொறுப்பாளர் திரு. ஜீவன் அவர்களை தொடர்புகொண்ட போது “மிகச் சிறந்த இளம் வீரர். இந்த வருட முதல் போட்டியில் எமது வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்துடன், மானிப்பாய் பரீஷ் மோதிய போட்டியில் இவரின் சிறந்த துடுப்பாட்டத்தினால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம். எல்லோருடனும் இனிமையாக பழகும் சுபாவமுடையவர். பாவலனின் மரணத்தை அறிந்து நாங்கள் எல்லோருமே அதிர்ந்து போயிருக்கிறோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், அவரை அறிந்தவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலிகள்” என்று தெரிவித்தார்.
கோடைக் கால வார இறுதிநாட்களில் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் சுமார் நாற்பதுக்கும் அதிகமான கழகங்களுக்கிடையே, ஐந்து பிரிவுகளில், பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தினரால் நடாத்தப்பட்டுவரும் போட்டித்தொடர்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.