யாழ் மண்ணின் உதைபந்தாட்ட ரசிகர்களை தனது கால் வித்தைகளால் கட்டிப்போட்ட தேசிய அணி வீரன் ஞானம்..!

0
636 views

யாழ் மண்ணின் உதைபந்தாட்ட ரசிகர்களை தனது கால் வித்தைகளால் கட்டிப்போட்ட ஞானம் என பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் செபமாலைநாயகம் ஞானரூபன். 09 அங்கத்துவர்களை கொண்ட குடும்பத்தில் 05 பிள்ளையாக வந்துதித்த இவரை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்து விடமுடியாத அளவிற்கு சிறப்புத் திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு காத்திரமான உதைபந்தாட்ட வீரன் தான் ஞானருபன். போரின் காரணமாக இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்பில் வசித்த காலத்தில் இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க வித்தியாலய 12 வயதினர்கான அணியில் இடம் பிடித்தார்.

பின் மீண்டும் 2002ம் ஆண்டளவில் இளவாலை ஹென்றியரசர் கல்லூரியில் இணைந்த ஞானரூபன் சிறுவயதில் இருந்தே உதைபந்து மீது தீராக் காதலும் அதீத திறமையும் கொண்ட ஒரு வீரர். பாடசாலை அணி அதனைத் தொடர்ந்து யாழ் மண்ணின் புகழ் பூத்த கழகங்களில் ஒன்றாகிய இளவலை ஹென்றீஸ் அணியின் புகழ்பூத்த நட்சத்திரமானார். பல்கலைக்கழக அணி, மாவட்ட அணி, மாகாண அணி, மாவட்ட சிறப்பு அணிகள் என தன் தடங்களை ஒவ்வொரு அணிகளிலும் ஆழமாக பதித்த ஞானரூபன் தன் விளையாட்டுத்திறன் சார் அம்சங்களினால் தமிழ் மக்களின் நீண்ட கால அவவாகிய தேசிய அணிக் கனவை அண்மையில் பூர்த்தி செய்து இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த ஒரு தனித்துவ வீரர்.

ஞானரூபனை பொறுத்தவரை இவரது கோல் போடும் பாங்கும், பந்தை லாவகமாக கொண்டும் செல்லும் பாங்கு என்பவற்றின் ஊடாக தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டிருக்கும் இவர், சமகால வடக்கின் முக்கியமான விளையாட்டு ஆளுமைகளில் முக்கியமான வராக கணிக்கப் படுகின்றார்.

அனுராதபுரம் மாவட்ட பிரபல கழகமான சொலிட் விளையாட்டுக் கழகத்தின் வீரராக இருக்கும் ஞானரூபன் அந்த அணியில் இடம்பெற்றுள்ள இதர தனித்துவ ஆளுமைகளாக கொள்ளக் கூடிய வட புலம் நன்கறிந்த பீமா மற்றும் கோபன் ஆகியோருடன் இணைந்து விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது இந்த அணி கடந்த வருடம் தேசிய ரீதியாக இடம்பெற்ற போட்டியில் வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசிய அணிக்காக தெரிவு செய்யப்பட்ட ஞானரூபன் ஏலவே பங்களாதேஷில் இடம்பெற்றுள்ள போட்டிகளில் இலங்கை அணிக் குழாமில் இடம்பெற்று சென்று வந்திருந்த இவர்இ தற்போது வெளிநாடுகளில் இடம்பெறவுள்ள போட்டிகளில் பங்கு பற்றக்காத்திருக்கின்றார்.
தேசிய அணிக் கனவு என்பது ஒவ்வொரு வீரர்களுக்கும் நிச்சயமாக இருக்கின்ற ஒன்றுதான் அந்த வகையில் ஞானரூபன் போன்ற தனித்துவ சிறப்பு ஆளுமைகள் இந்த அணியில் இடம்பெற்றிருக்கின்றமை ஒன்றும் ஆச்சரியப்படவோ வியக்கத்தக்கவோ விடயங்கள் இல்லை.

யாழ் பல்கலைக்கழக மாணவனாகிய ஞானரூபன், அண்மையில் யாழ் பல்கலைக் கழகம் ஆனது அனைத்து பல்கலைக் கழகங்கள் இடையேயும் இடம்பெற்ற சுற்றுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள மிக முக்கியமான காரணியாகவும் திகழ்ந்தார். அகில இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டில் யாழ் பல்கலைகழகம் கடந்த 04 வருடங்களாக கிண்ணத்தை சுவீகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு நடைபெற்ற மினி ஒலிம்பிக் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் மற்றுமொறு பலம் பொருந்திய மொறட்டுவ பல்கலைக்கழகத்தை 4:1 கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டியில் ஓர் கோலினைப் போட்ட இவர், இச் சுற்றுப்போட்டியில் 06 போட்டிகளில் களமிறங்கி 12 கோல்களைப் போட்டு தொடராட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் அகில இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டில் இவரது தலைமையில் களமிறங்கிய யாழ் பல்கலைகழகம், அரையிறுதியில் கிழக்குப் பல்கலைகழக அணியை, ஞானரூபன் அடித்த 02 கோல்களின் உதவியுடன் 2:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இறுதிப்போட்டியிலும் ஞானரூபனின் அதிரடி தொடர, பலம்பொருந்திய தெற்குப் பல்கலைக்கழக அணியையும் 2:0 என்ற கணக்கில் வீழ்த்தி 2014ம் ஆண்டிற்கான கிண்ணத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது. இச் சுற்றுப் போட்டியின் தொடராட்ட நாயகன், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன், Srilankan University Sports Award (SLUSA) மற்றும் மக்கள் மனங்கவர்ந்த வீரன் போன்ற விருதுகளை வென்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் 2012ம் ஆண்டு ”AAA Movie International” ஆல் ” Best Bootballer Of Jaffna District ” எனும் சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர் எண்ணற்ற மாவட்ட, மாகாண விருதுகளை வென்றுள்ள ஞானரூபன் பல தேசிய ரீதியான விருதுகளையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தேசிய அணியில் ஓர் தமிழனாக, எம் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் வீரனை, இந்த சந்தர்பத்தில் வாழ்த்தி இப்பகுதியினூடாக சிறு அறிமுகம் செய்வதில் நாம் பெருமையடைகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here