குதிகால் தசைநார் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலையில் இங்கிலாந்து மற்றும் சசெக்ஸ் அணி விக்கெட் கீப்பர் மேட் பிரையர் கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் பிரையர். இதனையடுத்து 2014 சீசன் முழுதும ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 2015-இல் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் நுழையலாம் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் வருத்தத்துடன் ஓய்வு அறிவித்தார்.
“இந்த நாள் எனக்கு துயரமான நாள். நான் நேசிக்கும் ஒரு விளையாட்டிலிருந்து நான் விலகுவதை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காயத்திலிருந்து மீண்டு 2015-ல் தொடரலாம் என்று நினைத்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னால் முடியவில்லை. எனவே இன்று இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று. சசெக்ஸ், இங்கிலாந்து அணிகளுக்காக ஆடிய தருணங்கள் என் நினைவிலிருந்து அகலாதவை, இரு அணிகளுக்காகவும் விளையாடியதை கவுரவமாகக் கருதுகிறேன். மேலும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் வெற்றிப் பயணங்களில் உடனிருந்தேன் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் மேட் பிரையர்.
33 வயதாகும் மேட் பிரையர் 79 டெஸ்ட் போட்டிகளில் 4099 ரன்களை எடுத்துள்ளார், விக்கெட் கீப்பராக 256 டிஸ்மிஸல்களுடன் ஆலன் நாட் இடத்துக்கு அடுத்த இடத்தில் உள்ளார். 3 முறை இங்கிலாந்து ஆஷஸ் தொடர்களை வென்ற போது மேட் பிரையர் பங்களிப்பு செய்துள்ளார். 2011-ம் ஆண்டு உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக உயர்வுற்றபோதும் மேட் பிரையர் அணியில் இருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் 2007-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் கண்டார். அதிகபட்ச 131 ரன்களும் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டதே. மொத்தம் 7 சதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 68-இல் மட்டுமே விளையாடியுள்ளார் மேட் பிரையர். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். எதிரணி வீரர்கள் கிரீஸில் நிற்கும் போது தனது பேச்சால் அவர்களைத் தொந்தரவு செய்து அவர்கள் கவனத்தை சிதறடிப்பது போன்ற காரியங்களில் இவர் வல்லவர். இவரது இத்தகைய செய்கைகளை இயன் சாப்பல் ஒரு முறை கண்டித்த போது, “மேட் பிரையர் முதலில் கேட்ச்களை பிடிக்க வேண்டும், விக்கெட் கீப்பிங்க்கை மேம்படுத்த வேண்டும்” என்று கூறியது இத்தருணத்தில் நினைவுகூரத் தக்கது.