இந்தியா – வங்கதேசம் இடையே ஃபதுல்லாவில் இன்று காலை தொடங்கிய டெஸ்ட் போட்டி மழையால் தடைபட்டது. தொடர்ந்து உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை எடுத்துள்ளது. தவன், விஜய் களத்தில் இருந்தனர். விராட் கோலி முழுநேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் இந்திய அணி ஆடும் முதல் போட்டி என்பதால் இந்த டெஸ்ட் போட்டியின் மீது அதிக வெளிச்சம் விழுந்துள்ளது.
வங்கதேச அணியும், உலகக் கோப்பை, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் தொடர் வெற்றி என புது எழுச்சியுடன் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ரஹிம் முதலிலேயே வருத்தம் தெரிவித்தார். துவக்க வீரர்களாக களமிறங்கிய விஜய், தவன் இருவரும் நம்பிக்கையான துவக்கத்தைத் தந்தனர். குறிப்பாக தவன், ஒரு நாள் போட்டியைப் போலவே ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். மறுமுனையில் விஜய் டெஸ்ட் போட்டிக்கே உரிதான நிதானத்துடன் ஆடினார். 11 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களைக் கடந்தது. தவன் 47 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து சீரான வேகத்தில் ரன் குவித்து வந்த இந்திய அணியின் ஆட்டம் 24-வது ஓவரில மழையால் தடைபட்டது. தவன் 74 ரன்களுடனும், விஜய் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தவன் 158 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். விஜய் 178 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்துள்ளார். உணவு இடைவேளைக்கு முன்பாகவே மழையால் தடைபட்ட ஆட்டம், 3 மணி அளவில்தான் மீண்டும் தொடர்ந்தது. அப்போதும் இந்திய அணியின் வேகம் தடைபடாமல் தொடர்ந்தது.
கடைசி வரை துவக்க வீரர்கள் இருவரையும் களத்தை விட்டு வெளியேற்ற முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 239 ரன்களைக் குவித்து விக்கெட் இழப்பின்றி இருந்தது. விஜய்க்கு சாதகமாக முடிந்த சில லெக் பிஃபோர் முடிவுகள் சந்தேகத்தை. ஏற்படுத்தினாலும், மற்றபடி இந்திய அணியே இன்று களத்தில் ஆதிக்கம் செலுத்தியது. நாளைய போட்டியில் அதிக ரன்களைக் குவிக்கும் பட்சத்தில், வங்கதேசத்தை நெருக்க இந்திய அணிக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
கோலி தலைமை கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். எனினும் முழு நேர கேப்டனாக கோலி களமிறங்கும் முதல் போட்டி இதுதான். அதனால், அவருடைய கேப்டன் ஷிப் திறமையை சோதனை செய்யும் போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
கோலி வெற்றிகரமான பேட்ஸ்மேனாக பரிணமித்திருந்தாலும், அவர் கேப்டனாக இந்திய அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெஸ்ட் போட்டியில் தோனி இல்லாமல் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்பதை சோதிக்கும் போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது கவனிக்கத்தக்கது.