இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி டெஸ்ட், ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டெஸ்ட் தொடர் 1-1 என டிரா ஆனது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி, டெஸ்ட் ஆடும் ஒரு அணியைக் கூட வெல்லாமல், வங்கதேசத்திடம் தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது.
இதையடுத்து ஆண்ட்ரூ ஸ்டிராஸ் அணியின் இயக்குநராகப் பொறுப்பேற்று, அணியில் பல மாற்றங்கள் செய்தார். பீட்டர் மோர்ஸ் நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரேவர் பெயிலிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2019 உலகக் கோப்பைத் தொடர் தங்கள் சொந்த மண்ணில் நடைபெறுவதால், அதற்கு இப்போதிருந்தே தயாராகும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆண்டர்சன், பிராட், பெல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக, ஹேல்ஸ், பட்லர், ஜேசன் ராய், சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷீத் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் அணிக்குத் தலைமை ஏற்ற மோர்கன் கேப்டனாக செயல்பட உள்ளார். வெலிங்டனில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்றில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது நியூஸிலாந்து. வேகப்பந்து வீச்சாளர் டிம் செüதீ ஏழு விக்கெட்டுகளை வீழ்த்த, இங்கிலாந்து 123 ரன்களில் சுருண்டதும், நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 25 பந்துகளில் 77 ரன்கள் விளாசி மிரட்டியதும் நினைவில் இருக்கலாம். அதே ஆட்டத்தைத் தொடர நியூஸிலாந்து காத்திருக்கிறது.
இதுகுறித்து நியூஸிலாந்து பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறுகையில் “அன்று எங்கள் ஆட்டம் அபாரமாக இருந்தது. அதேபோன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்றார். அதற்கேற்ப நியூஸிலாந்து அணி இங்கிலாந்து உள்ளூர் அணியான லீசெஸ்டர்ஷைர் அணியை 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உற்சாகத்தில் உள்ளது. எனவே, இங்கிலாந்துக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் சவால் காத்திருக்கிறது.