இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 199 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளுக்கிடையேயான இந்த போட்டி இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 350 ரன்களும், நியூஸிலாந்து 350 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 91 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 454 ரன்கள் எடுத்து “டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 455 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 13 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது. ஆடம் லீத் 24 ரன்களுடனும், கேப்டன் குக் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் லீத் ரன் ஏதும் எடுக்காமல் ரோஞ்சி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மறுமுனையில் நிலைத்து ஆடிய குக் அரை சதம் அடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் சிறிது நேரமே களத்தில் இருந்தார். அணியின் ஸ்கோர் 141-ஆக இருந்தபோது குக் (56 ரன்கள்) எல்பிடபிள்யூ ஆனார்.
இதன் பின்னர் வந்தவர்களில் 6-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜோஸ் பட்லர் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்களும் நிலைக்காததால் 91.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 199 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. அசத்தலாக பந்துவீசிய மார்க் கிரேக், வில்லியம்ஸன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஆட்டநாயகனாக வாட்லிங்கும், தொடராட்ட நாயகனாக குக் மற்றும் போல்ட்டும் தெரிவு செய்யப்பட்டனர்.