ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில், சிவநாராயண் சந்தர்பால் பெயர் (40) இடம்பெறாததை அடுத்து, அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. முன்னாள் கேப்டன் கிளைவ் லாய்டு தலைமையிலான தேர்வுக் குழு 14 பேர் கொண்ட அணியின் பெயரை சனிக்கிழமை அறிவித்தது. அதில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரரான சந்தர்பால் பெயர் இடம்பெறவில்லை.
1994- முதல் தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம்பெற்று வரும் சந்தர்பால், இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 11,867 ரன்கள் குவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் டெஸ்டில் அதிக ரன்கள் குவித்த பிரையன் லாராவின் (131 போட்டி – 11,953 ரன்கள்) சாதனையை மிஞ்ச சந்தர்பாலுக்கு இன்னும் 87 ரன்களே தேவை. ஆனால், அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளில் 92 ரன்களே குவித்தார். அவரது சாராசரி 15.33. கடந்த பத்து இன்னிங்ஸ்களில் ஆறு முறை ஒற்றை இலக்கத்தில் வெளியேறியுள்ளார். தொடர்ந்து அவர் ஃபார்மின்றித் தவித்து வருவதால், டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றியுள்ள சந்தர்பாலுக்கு, வரும் டெஸ்ட் தொடரில் இடமளித்து அவரை கெüரவத்துடன் வழியனுப்ப வேண்டும் என்று லாரா கேட்டுக் கொண்டார். “ஆஸ்திரேலிய தொடருடன் எனது ஆட்டத்தை முடித்துக் கொள்கிறேன். இது, சொந்த மண்ணில் விடை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பாக அமையும். என்னை ஓய்வு பெறுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று சந்தர்பால் தெரிவித்தார். ஆனால், தேர்வுக் குழு சந்தர்பால் மட்டுமல்லாது லாரா உள்பட யார் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இதனால் சந்தர்பாலின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்தது.