கிளம்பினார் மெக்கல்லம்; சென்னை அணி தவிப்பு!

0
362 views

எது நடக்கக்கூடாதோ அதுதான் சென்னை அணிக்கு நடந்துள்ளது. இந்த அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், முக்கியமான கட்டத்தில் தேச நலனுக்காக அணியை விட்டு விலகிவிட்டார். ப்ளேஆஃப் போட்டியில் மெக்கல்லம் இல்லாமல் என்ன செய்யப்போகிறது சென்னை அணி?

வழக்கமாக சென்னை அணியில் மிகச்சிறப்பாக ஆடும் சுரேஷ் ரெய்னா இந்தமுறை சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு ஐபிஎல்-லிலும் 400 ரன்கள் எடுத்துவிடுவார். இந்தமுறை 321 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். நிச்சயம் நன்றாக ஆடுவார் என்கிற நம்பிக்கை போய், இந்தமுறையாவது ரன்கள் அடித்து நிலைத்து நிற்பாரா என்கிற தவிப்பையே ஒவ்வொரு மேட்சிலும் உருவாக்கினார். இதனால் இந்த ஐபிஎல் முழுக்க சென்னை அணி, மெக்கலத்தின் அதிரடி ஆட்டத்தையே நம்பியிருந்தது.

வெற்றிகரமான உலகக்கோப்பைக்குப் பிறகு ஐபிஎல்-லிலும் ஜமாய்த்துவிட்டார் மெக்கல்லம். 14 மேட்சுகளில் 436 ரன்கள். ஸ்டிரைக் ரேட் – 155.71. 23 சிக்ஸர்கள். கெய்லுக்கு அடுத்து அதிக சிக்ஸர்கள் அடித்தவர், மெக்கல்லம் தான். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஆடிய மெக்கல்லம் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்துக்குப் பறந்துவிட்டார். இதனால் தன் பலத்தை இழந்து தவிக்கிறது சென்னை அணி. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டிவைன் ஸ்மித் சில மேட்சுகளில் நன்றாக ஆடினாலும் இவரை நம்பமுடியாது என்கிற கருத்தை உருவாக்கிவிட்டார்.

உலகக்கோப்பையில் தெ.ஆ அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த ஹஸ்ஸி தான் இனி சென்னை அணியின் மற்றொரு தொடக்க வீரர் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. அவரால் பழையபடி சிறப்பாக ஆடமுடியுமா? அப்படியே ஆடினாலும அதிரடியாக ஆடி பவர்பிளேயில் அணிக்கு நல்ல ஸ்கோரை அளிக்கமுடியுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு அவர் எப்படி விடையளிக்கப் போகிறார்? இதனால் பலவீனமான முதல் 3 பேட்ஸ்மேன்களுடன் ப்ளேஆஃப்புக்குள் நுழைகிறது சென்னை அணி. கடைசி ஓவர்களில் தோனி, ஜடேஜா, பிராவோவால் பழையபடி அதிக ரன்களைக் குவிக்கமுடியவில்லை.

இப்படி சென்னை அணியின் பேட்டிங்கில் நிறைய குழப்பங்கள் உள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ரெய்னாவும் டுப்ளெஸ்ஸியும் நன்றாக ஆடினாலும் ஏதோ ஒரு பெரிய பிரச்னை இந்த அணியின் பேட்டிங்கில் உள்ளது. சென்னை அணிக்கென்று ஒரு தரம் இருக்கிறது. அது இதுவரை முழுமையாக வெளிப்படவில்லை. மெக்கல்லம் இல்லாத நிலையிலும் சென்னை அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி அணியைக் கரை சேர்ப்பார்களா என்பது அடுத்தச் சில ஆட்டங்களில் தெரிந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here