5-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா!

0
238 views


11–வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் 14–ந்தேதி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் தொடங்கியது. ஒன்றரை மாத காலமாக நடந்து வந்த 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் கிளைமாக்ஸாக இறுதிப்போட்டி அரங்கேறியது.

உலகின் மிகப்பெரிய ஆடுகளமான மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியது. அதில் அரையிறுதி வரை தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்த நியூசிலாந்து அணி  டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.  முதல் ஓவரிலேயே ஸ்டார்க் வீசிய பந்தில் போல்ட்டாகி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார் பிரண்டென் மெக்கல்லம். தொடர்ந்து 11.2-வது ஓவரில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் போல்ட் ஆகி அதிரடி வீரர் கப்திலும் வெளியேறினார்.

அடுத்து வில்லியம்சன் ஜான்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. அடுத்து களமிறங்கிய டெய்லர் மற்றும் எலியாட் இருவரின் ஆட்டத்தால் நியூஸி. 100 ரன்களை கடந்தது. இந்நிலையில்  ஜேம்ஸ் பவுல்கெனர் வீசிய பந்தை அடித்தபோது ஹேடினிடம் கேட்ச் கொடுத்து 40 ரன்களுடன் அவுட் ஆனார் டெய்லர். அடுத்து களமிறங்கிய ஆண்டர்சென் அதே ஓவரில் போல்ட் ஆனார்.  பின்வந்த ரோஞ்ச்-ம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தொடர்ந்து விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. பின் களத்தில் இருந்த எலியாட்டுடன் வெட்டோரி கைகோர்த்தார். 39 ஓவர்களில் 159 ரன்களை நியூஸி. எடுத்திருந்தது. பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெட்டோரியும் வெறும் 9 ரன்களுடன் வெளியேறினார். இதையடுத்து  நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எலியாட் 83 ரன்களில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை எடுத்தது.

184 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பவுல்ட் வீசிய பந்தில் ஆரோன் ஃபிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி தோல்வி கண்டார். 7 பவுண்டரிகளுடன் டேவிட் வார்னர் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது விக்கெட்டாக எலியாட் வீசிய பந்தை அடித்து ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பிறகு  ஸ்மித் மற்றும் கிளார்க் ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 100 ரன்களை கடந்தது. கிளார்க் 1 சிக்ஸ்  10 பவுண்டரிகளுடன் 74 ரன்களை எடுத்திருந்தபோது ஹென்றி வீசிய பந்தில் போல்ட் ஆனார். ஸ்மித் 52 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வாட்சன் 2 ரன்களை எடுத்தார். 33.1 ஓவர்களின் முடிவில் 186 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 5-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக நியூசிலாந்தின் மூன்று முக்கிய இலக்குகளை வீழ்த்திய போல்க்னரும்  தொடராட்ட நாயகனாக இத் தொடரில் 22 இலக்குகளை வீழ்த்திய ஸ்ராக் தெரிவுசெய்பயப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here