உலக கோப்பை கிரிக்கெட் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை தென் ஆப்ரிக்கா அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலக கோப்பை கிரிக்கெட்டில் வெலிங்டனில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்ரிக்கா அணியில் அதிகபட்சமாக கேப்டன் டி வில்லியர்ஸ் 99 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 342 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய கத்துக்குட்டி அணியான ஐக்கி அரபு எமிரேட்ஸ் அணி தென் ஆப்ரிக்க அணியின் துல்லிய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 47.3ஓவர்கள் விளையாடிய அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பிலாண்டர், மார்கல், டி வில்லியர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது டி வில்லியர்ஸுக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்க.அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.