லண்டனில் மிகப் பிரபலமான ஒரு மொத்த வியாபார நிறுவனத்தை திறம்பட நடாத்தி வருபவர் வல்வையைச் சேர்ந்த ஒரு பெண் .திருமதி ஷர்மிளா ஜெகன்மோகன்
இங்கிலாந்தின் வர்த்தக உலகில் நுகர்வோரால் அதிகம் பாவிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் (Fast Moving Consumer Goods – FMCG Companies) முதல் நூறு இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களில் ஒன்றே ஒன்றில் மாத்திரமே ஒரு பெண் முகாமைத்துவ பணிப்பாளராக இருக்கும் இவ்வேளையில் லண்டனில் மிகப் பிரபலமான ஒரு மொத்த வியாபார நிறுவனத்தை திறம்பட நடாத்தி வருபவர் வல்வையைச் சேர்ந்த ஒரு பெண் என்பது எங்கள் அனைவருக்குமே பெருமைக்குரிய விடயம். இவர் மீனாட்சி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த சோதிநாராயணசாமி விஜயராஜா, ராதாஜெயலட்சுமி விஷ்ணுசுந்தரம் தம்பதிகளின் புதல்வியும், ஊரணியைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகனின் அன்பு மனைவியுமான திருமதி. ஷர்மிளா ஜெகன்மோகன் ஆவார்.
இவர் நடாத்தி வரும் Hi-Line Cash and Carry என்ற நிறுவனம் வருடத்திற்கு பல மில்லியன் பவுண்ஸ் வருவாயை ஈட்டுகின்றது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் மொத்த வியாபாரிகளுக்கான கூட்டுறவுச் சங்கங்களில் முக்கியமான ஒன்றான Landmark Buying Groupல் இருக்கும் நிறுவனங்களில் ஒரு பெண், முகாமைத்துவ பணிப்பாளராக இருக்கும் ஒரே நிறுவனம் ஹைலைன் மாத்திரமே.
உலகில் அதிகூடிய நுண்ணறிவு (High IQ) கொண்டவர்களுக்கான Mensa அமைப்பிலும் இவர் அங்கத்தவர் என்பதை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும். உலக மக்கள் தொகையில் அதிகூடிய நுண்ணறிவைக் கொண்டவர்களாக 2% ஆனவர்களே கருதப்பட்டு அவ்வமைப்பில் சேர்க்கப்படுவார்கள். இவரது IQ 157 ஆகும்.
இணைய உலகின் போக்கையே தீர்மானிக்கும் டுவிட்டரில் 6600 பாலோயர்களை தாண்டி சாதனை செய்து கொண்டிருக்கிறார். @iThamilachi என்ற பெயரில் இவர் பொது அறிவு துணுக்குகளையும் சொந்த அனுபவங்கள், கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் பல கீச்சுகள் தமிழ்நாட்டில் வெளிவரும் பிரபல பத்திரிக்கைகளான குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன், குங்குமம், தமிழ் ஹிந்து என்பவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கீச்சுகளை iThamilachi என்ற முகநூல் பக்கத்திலும் பார்க்கலாம்.
“ஷர்மியின் பார்வையில்” என்ற பெயரில் இணைய பக்கமும் நடத்தி தன் எழுத்தாற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
எழுத்தாற்றல் மட்டும் இல்லாமல் பேச்சுத் திறனிலும் வல்லவர். ஆங்கிலம் மற்றும் தமிழில் பல மேடைகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சொற்பொழிவாற்றியுள்ளார். வெளி நாடுகளில் நடக்கும் வர்த்தக சம்மேளனங்களில் கலந்து இங்கிலாந்தின் மொத்த வியாபாரம் பற்றி பல முறை பேசியுள்ளார். செல்லும் இடங்களுக்கு எல்லாம் சேலை கட்டி பெரிய பொட்டிட்டு சென்று தன் பண்பாட்டை நிலை நிறுத்தி வருகிறார். இது அவருக்கான மதிப்பையும் மரியாதையும் அதிகரிக்கும் செயலாகவே உள்ளது.
இங்கிலாந்தில் இளைஞர் மேம்பட்டுக்காக நடைபெறும் Outward Bound Trust இயக்கத்திற்கு இவர் செய்த செயற்பாட்டிற்காக பாராட்டும் வகையில் 2012ம் ஆண்டு இங்கிலாந்தின் அரசியின் வதிவிடமான பக்கிங்காம் அரண்மனைக்கு விருந்துபசாரத்திற்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பல சாதனைகளை செய்து வரும் போதும் இவர் தன்னடக்கம் காரணமாக எதையும் வெளிக்காட்டாமல் சாதாரணமாகவே எல்லோரிடமும் சகஜமாகப் பழகி வருவது இவரது மிகப்பெரிய சிறப்பு.
எல்லாவற்றிற்கும் மேலாக தன் தந்தையின் பெயரில் விஜயராஜா அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு தொண்டு நிருவனத்தையும் நடத்தி பல பேருக்கு உதவிகளையும் வழங்கி வருகிறார்.
வல்வையின் இம்மங்கை இன்னும் மெல்மேலும் சாதனைகள் புரிந்து எம் பெருமையை திக்கெட்டும் பரவச் செய்ய வல்வை முத்துமாரி அருள் புரிவாளாக..
விஜயராஜா அறக்கட்டளை
வல்வையைச் சேர்ந்த திருமதி ஷர்மிளா ஜெகன்மோகனும் அவர் சகோதரர் திரு ஜெயராஜா ஜெயகாந்தனும் இணைந்து அவர்களது தந்தை மற்றும் பெரியப்பா பெயரால் “விஜயராஜா அறக்கட்டளை”யை நடாத்தி வருகின்றனர்.
இவர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் தமிழர் சார்ந்த கலை கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுசரனை வழங்குகிறார்கள். தமிழர்களின் பல விளையாட்டுக் கழகங்களுக்கும் பிரதான அனுசரனையாளர்கள். அத்துடன் சிறுவர்கள் பாடசாலை தவிர்ந்த ஏனைய விளையாட்டுகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கால் பந்து மற்றும் கராத்தே வகுப்புகள் நடப்பதற்கான இடங்களை இலவசமாக அமைத்துக் கொடுக்கிறார்கள். 2013ம் ஆண்டு நடை பெற்ற சிறுவர்களுக்கான கணித போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலாவதாக வந்த மாணவர்களுக்கு ஒரு பவுண் தங்க நாணயம் பரிசாக தந்து கௌரவித்தார்கள்.
இலங்கையில் 300 மாணவர்களுக்கான படிப்பு செலவுகளை ஏற்றுக் கவனித்து வருகிறார்கள். ஆண்டு தோறும் மாற்றுத் திரனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளும், தலைவனை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள தையல் இயந்திரங்கள், பம்பு செட்டுகள் போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர். மேலும் வருடத்தின் ஒவ்வொரு மாதமும் பல முக்கிய குழந்தைகள் காப்பகங்களில் உணவு வழங்கிவருகின்றனர்.
பல பிரதேசங்களில் சிறு கடன் உதவித் திட்டங்களும் செயற்படுத்தப்படுகின்றன. போரால் சிதையுண்ட பல குடும்பங்களுக்கு மாதாந்த உதவித் தொகைகளும் வழங்குகிறார்கள்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
என்ற வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப இவ்விரு மைந்தர்களும் தங்கள் தந்தையின் புகழை பார் எங்கும் பரப்புவதுடன் அத்துடன் சேர்ந்து எம் வல்வையின் புகழையும் பரப்பி வருகிறார்கள். இவர்களை பெற அந்தத் தந்தையும் வல்வையும் என்ன தவம் செய்ததோ..?